2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகளை உருவாக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர், மேலதிக பிரதேச சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உப-குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'நாட்டில் ஏனைய பகுதிகளில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை என்ற ரீதியில் இருக்கின்றது. எனினும், நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையகத் தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக இழைக்கப்பட்டுவரும்  ஜனநாயக மீறலாகும்.

இவ்விடயமானது, எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே, இந்த அநீதி இப்போதாவது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவ் விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே  கருத்தொருமைப்பாடு இருக்கின்றது.

எனவே, உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உப-குழு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களையும் மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடி, புதிய பிரதேச சபைகளை நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

இது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் நடைபெற வேண்டும். எனது இந்த கோரிக்கையை,  உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உள்ளூராட்சி தேர்தல் எல்லை சீர்த்திருத்த அமைச்சரவை உப-குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வெகு விரைவில் எமது அமைச்சரவை உப-குழுவை சந்திக்கும் முகமாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.  

இந்த  நீண்ட கால அநீதி நிவர்த்திக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடாகும். இது தொடர்பான முடிவு, கூட்டணியின் கடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறினார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .