2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’பாம்புகளின் பள்ளியறையாக மாறியுள்ள வகுப்பறைகள்’

Kogilavani   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

ஹட்டன், கெப்ரியல் பெண்கள் பாடசாலையின் தமிழ் பிரிவை, பாடசாலை நிர்வாகம் திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.   

இப்பாடசாலையின் தமிழ் பிரிவில் கல்வி பயிலும் மாணவிகள், பாம்புகள், பூச்சிகள், பல்லிகளுக்கு மத்தியிலேயே, தமது கற்றலைத் தொடர்ந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,   

“நல்லாட்சியில், மூவின மக்களும் சமனாக மதிக்கப்படுகின்றார்கள் என்று அரசாங்கமும் அமைச்சர்களும் அடிக்கடி கூறிவருகின்றனர். ஆனால், மத்திய மாகாண முதலமைச்சும் மாகாண தமிழ்க் கல்வியமைச்சும் அதற்கு நேரெதிராக செயற்பட்டு வருகின்றதோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.  

“ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலைக்கு, அண்மையில் விஜயம் மேற்கொண்டேன். இந்தப் பாடசாலையில் சிங்களப் பிரிவானது, மாணவிகள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலில், மிக அழகாக அனைத்து வசதிகளுடனும் இயங்கி வருகின்றது. ஆனால், இதன் தமிழ் பிரிவு, மாட்டுக் குடிலைவிடவும் மிக மோசமான சூழலில் இயங்கி வருகின்றது. இந்த வகுப்பறைகளில் கல்வி கற்றுவரும் மாணவிகளை, முதலில் பாராட்டியே தீர வேண்டும்.   

“இந்த வகுப்பறைகளில், எலி, பாம்புகள் குடியிருப்பதுடன், விலங்குகளின் எச்சங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. வகுப்பறைகளுக்குள் பாம்புகள் அடிக்கடி வந்து செல்வதாக, மாணவிகள் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.  

மாணவிகளே, என்னை அழைத்துச் சென்று, வகுப்பறைகளின் நிலைமைகளை நேரடியாகக் காண்பித்தனர். அவர்கள், கண்களில் கண்ணீர்மல்க இந்த விடயங்களை எனது கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

“தற்போது, நாடுமுழுவதும் டெங்குக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், மேற்படி வகுப்பறைகளில் கல்வி பயிலும் மாணவிகளும், மிக விரைவில் நோய் நிலைமைகளுக்கு உள்ளாவார்கள் என்பது உறுதி. இங்கு கல்வி பயில்கின்ற மாணவிகள் தமிழர்கள் என்பதால், இவ்வாறு பாராபட்சம் காட்டப்படுகின்றதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது.  
“ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற இந்தப் பாடசாலை,  இரண்டு விதமாக எவ்வாறு நடத்தப்படலாம். நிர்வாகம் திட்டமிட்ட அடிப்படையில், தமிழ் பிரிவை புறக்கணித்து வருகின்றது.   

“எனவே நான் இவ்விடயத்தை, உடனடியாகக் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். அவர் இந்தப் பாடசாலைக்கு, புதிதாக மூன்று மாடி கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியிருக்கின்றார்.  

“எனவே, உடனடியாக பாடசாலையின்  தமிழ் பிரிவு முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .