2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகாவலி போட்டியாளர்களுக்கு ‘காணிகள் வழங்கப்படும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி   

மகாவலி விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி, தமது திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள் அனைவருக்கும், மகாவலி வலயத்திலேயே காணிகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்கும், புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்குத் தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும், அவர் கூறினார்.   

30ஆவது மகாவலி விளையாட்டுப் போட்டி, எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டு மைதானத்தில், கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை  ஆகிய இரு தினங்களில் நடைபெற்றன.  

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 70 வருடகால வரலாற்றைக் கொண்ட மகாவலித் திட்டமானது, பொல்கொல்லை திட்டம் ஆரம்பமானதன் பின்னரே புத்துயிர் பெற்றதாகக் தெரிவித்தார்.

நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, மகாவலி பகுதிகளைச் சேர்ந்ததெனச் சுட்டிக்காட்டிய அவர், இதில், விவசாய அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மின்னுற்பத்தி என்பன காணப்படுவதுடன், விளையாட்டு மற்றும் கலை, கலாசாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதன்மூலம் நாட்டுக்குள், சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இவர்களால், நாட்டுக்குப் புகழ் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களாக நடைபெற்றுவரும் மகாவலி விளையாட்டுப் போட்டி காரணமாக, நாட்டுக்குள் சிறந்த வீர, வீராங்கனைகள் உருவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கை ஒரு விவசாய நாடு என்ற ரீதியல், விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், தேசியக் கொள்கை ரீதியிலும், விவசாயத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகத்  தெரிவித்தார்.   

நாட்டின் விவசாய அபிவிருத்திக்காக, நீர்ப்பாசன், மகாவலி, கால்நடை ஆகிய அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பன இணைந்து, விரிவான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருவதாகவும் கூறிய ஜனாதிபதி, எனினும், நாட்டின் அபிவிருத்தி, பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் இதற்கு, இயற்கை அனர்த்தங்கள், முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டே வருகின்றன என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களிலும், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .