2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண சபை தலைமை பதவிக்கு அறுவர் போட்டி

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையின் தலைவர் தெரிவு எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாணசபையின்  தலைவராகவிருந்த  மஹிந்த அபேகோன், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கேற்ப உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையால் அவ்வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை  நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஜீலை 21ஆம் திகதி நடைபெற்ற மத்திய மாகாணசபை அமர்வு பொதுத்தேர்தலையொட்டி எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலே எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வின்போது இரகசிய வாக்கெடுப்பின்மூலம் சபைத் தலைவர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பில் 40 பேரும் எதிர்க்கட்சியில் 18 பேருமாக மொத்தம் 58 உறுப்பினர்களை கொண்டமைந்த மத்திய மாகாணசபையில் தலைவர் பதவிக்காக அறுவர் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கமைவாக, ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த மதியுகராஜா, சபையின் பிரதித் தலைவர் ஆர்.எம்.எஸ்.பி. ரதனாயக்க, டபிள்யூ.எம்.யசமான, எஸ்.கே.அமரதுங்க ஆகியோரும் ஐ.தே.க சார்பில் ரோஹன பண்டாரநாயக்க, ஜனக அலகபெரும ஆகியோரும் போட்டியிடவுள்ளதாகவும் இவர்கள் ஏனைய உறுப்பினர்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, சபை தலைவர் நியமனத்தின்போது ஆட்சிமாற்றமொன்று ஏற்படலாமென எதிர்வுகூறப்படுகின்றது. மத்திய மாகாணசபையின் ஆட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபபின் கீழுள்ள நிலையில்  சபைத்தலைவர் பதவிக்கு இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் போது மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஐவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஆறுவர்  மாகாணசபை உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, மத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 12 தமிழ் உறுப்பினர்களில் 6 பேர் தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்களாகவும் ஏனைய  6 பேரில் இருவர் தன்னிச்சையாகவும் 4 பேர் அமைப்பு ரீதியாகவும் உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணசபையின் சபைத் தலைவர் தெரிவின் போது, மத்திய மாகாண சபையில் புதிய ஆட்சி மாற்றமொன்று ஏற்படலாமென்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .