2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’மலையக மக்கள் பற்றி சிந்திக்காதவருக்கு சுடலை ஞானம் பிறந்துவிட்டது’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரித்தாளும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரராகவே, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் செயற்பட்டு வருவதாகவும் இதன் ஓர் அங்கமாகவே, மலையகத் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்றும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாகச் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அவர்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எனவே, அதாவுல்லாஹ் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காடாகக் காட்சியளித்த பகுதிகளை, தங்களது கடின உழைப்பால் வளம்மிக்க பகுதிகளாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்களே என்றும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுத்ததுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பல வழிகளிலும் உழைத்துள்ளனர் என்றும், அவர் கூறினார்.

எனவே, பெருந்தோட்டத்துறையின் காவல் தெய்வங்களாகக் கருதவேண்டிய தமது மக்களை, மாறுபட்ட கோணத்தில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பல ஆண்டுகளாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகப் பதவி வகித்த அதாவுல்லாஹ், மலையக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் மலையக மக்களின் நலன்கள் பற்றிச் சிந்திக்காத அதாவுல்லாஹ் போன்றவர்களுக்கு, தற்போது திடீரெனச் சுடலை ஞானம் பிறந்துள்ளதன் பின்னணி என்னவென்றும், வேலு குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

“தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே, இனிவரும் காலப்பகுதியில் உரிமைகளை வெல்லக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அரசியல் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், இதனை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.

“இந்நிலையில், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கி, அவர்களின் பேரம் பேசும் சக்தியை சூன்யமாக்குவதற்காக, பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரர்களாக, அதாவுல்லாஹ் போன்ற மூத்த அரசியல்வாதிகள் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அற்பசொற்ப சலுகைகளுக்காக, தனது சமூகத்தைக் காட்டிக்கொடுப்பதுடன், ஏனைய சமூகங்களையும் சீண்ட முற்படுவதானது, சாக்கடை அரசியலின் உச்சகட்டமாகும் என்பதை அதாவுல்லாஹ்வுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், வேலு குமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X