2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'ஹம்பாந்தோட்டை-மொனராகலை வரை 500 தொழிற்சாலைகள் அமைக்கப்படும்'

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக

'ஹம்பாந்தோட்டையிலிருந்து மொனராகலை வரையில் 500 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டு, அத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் பொருட்களை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு, தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும்' என்று பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டி ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஏ.ஸீ.எஸ்.ஹமீட்வீதி, காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

'ஐக்கிய தேசியக் கட்சியானது, சிறுபான்மையினத்தவர்களுக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வரும்; ஒருக் கட்சியாகும். இதன் கொள்கை, கண்டிய மன்னர்களின் கொள்கையாகும்.

போர்த்துக்கேயரது ஆட்சிக் காலத்தில், கரையோரங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள், மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம்கள், கண்டி செனரத் மன்னனிடம் வந்துசேர்ந்தபோது, அவர், அவர்களில் 4,000 பேரை, கிழக்கு மாகாணத்தில் குடியேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.

அதேபோன்று, கத்தோலிக்கர்களை வஹகோட்டை பிரதேசத்தில் குடியோற்றினார். அன்றைய மன்னர்கள் சிறுபான்மையின மக்களை ஆதரித்தே நடந்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியும், அவ்வாறே சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தும் அவர்களை ஆதரித்துமே வருகின்றது' என்றார்.

'சிலர், நல்லாட்சி அரசாங்கம் எப்போதும் கவிழும் என நினைத்தவாறு தமது விரல்களை எண்ணிக்கொண்டுள்ளனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் விழப்போவதில்லை. பிரதான இருக் கட்சிகள் ஒன்றிணைந்து, உருவாக்கிய பலம்வாய்ந்த அரசாங்கமே, தற்போதைய நல்லாட்சி அரசாங்கமாகும்.

இதனை உணர்ந்த சிலர், நல்லாட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த விளைகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களையும் மக்களையும் திசைதிருப்பி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதுடன், நாட்டுக்கு முதலீட்டார்கள் வருவதைத் தடைசெய்து பொருளாதாரத்தை சீர்குழைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் அரசு இடமளிக்காது”  என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X