2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கால்நடை வளர்ப்பு கௌரவமான தொழிலாகும்:அமைச்சர் தொண்டமான்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கால்நடை வளர்ப்புத்தொழிலில் முன்னிலையில் இருந்த நுவரெலியா மாவட்டம் தற்போது இந்தத்தொழிலில் ஏனைய மாவட்டங்களிலிருந்து பின்னிலையிலிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை மற்றும் சமூக கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந்தக்கூட்டத்தில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம், பிரதேச சபை நகரசபை தலைவர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,தோட்ட முகாமையாளர்கள்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்  கால்நடை வைத்தியர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் காலத்தில் நுவரெலியா மாவட்டம் கால்நடை வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் நுவரெலியா மாவட்டம் முன்னிலை வகித்திருந்தது. ஆனால் இன்று இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.ஏனென்றால் அந்தக்காலத்தில் எமது பெரியோர் கால்நடை வளர்ப்புத்தொழிலை கௌரவ தொழிலாக கருதினர்.

ஆனால் இன்று இந்தத்தொழிலை கேவலமாக நினைப்பதால் தான் நுவரெலியா மாவட்டத்தில் கால் நடை வளர்ப்புத்தொழில் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகி வருகின்றது.எனவே கால்நடை வளர்ப்புத்தொழிலில் நுவரெலியா மாவட்ட மக்கள் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் புதிய சுற்றாடல் சட்டத்திட்டங்களால் கால் வளர்ப்பாளர்கள் நீதிமன்றங்களுக்குச்சென்று அபராதம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்புடன் கலந்துரையாடவுள்ளேன்.

இதேவேளை கால்நடைகளுக்கு ஊசிபோடுவது தொட்ரபிலும் கால்நடை வளர்ப்பாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கால்நடைகளுக்கு ஊசியேற்றும் தொழினுட்பவியலாளர்களின் பற்றாக்குறையினால் தனியார் துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத்துறையில் ஈடுபட முன்வருகின்றவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும். தரமான பாலினை உற்பத்தி செய்கின்ற போது இந்தப்பாலுக்கு  நியாயமான விலை வழங்கப்படும். எனவே தரமான பாலினை உற்பத்தி செய்வதில் பாற்பண்ணையாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .