2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்திலும் சீரற்ற கால நிலை; மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ, மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்றைய தினமும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் சிறியளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளன.

அதிகுளிரான காலநிலை நிலவுவதால் சிறுவர்களும் முதியவர்களும் நோயாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதோடு காசல்ரீ, மவுசாகலை, கெனியன், லக்ஸபாண, விமலசுரேந்திர ஆகிய  நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக இந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று 10ஆம் திகதி காலை திறந்து விடப்பட்டுள்ளது. அடைமழையினால் தோட்டப்பகுதிகளில் தற்காலிக குடில்களில் வாழுகின்ற தோட்டத்தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பொகவந்தலாவை எலிபடை தோட்டத்தில் இன்று 10ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இருவர் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் விவசாயப்பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளதோடு தோட்டத்தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தொழிலுக்குச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆற்றோரங்களில் வாழுகின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .