2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ம.தே.மு அதிக ஆசனங்களைப் பெறும்: பிரபா எம்.பி.

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நடைபெறவுள்ள மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெறும் சாத்தியம் புதிதாக உருவாகியுள்ள எமது மலையக தேசிய முன்னணிக்கே உள்ளது' என ஜனநாயக மக்கள் காங்கிரஸின்; தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மலையகத்தில் தேசிய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை  விட தோல்வியுற்றவர்களே அதிகம். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு தேசிய கட்சிகளை விட தனித்து போட்டியிடுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர்.

எமது முன்னணி மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. இன்று மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் கொள்கையும் எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸின் கொள்கையும் இணைந்து போயுள்ளமையினாலேயே இக்கூட்டணி உருவாகியுள்ளது.

13ஆவது திருத்த சட்டத்தில் அரசாங்கம் கைவைக்குமேயானால் அதனை முழுமையாக எதிர்ப்பதற்கு நாங்கள் முன்வந்திருக்கின்றோம். அதேபோல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த 30 வருட காலத்திலும் சரி அதன் பின்பு இன்று வரையும் சரி மலையக இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான யாரும் முன்வரவில்லை. எல்லோரது கவனமும் யுத்தத்திற்கு முன்பும் பின்பும் வடகிழக்கிலேயே பதிவாகியுள்ளது.

இது எமது மக்களுக்கான ஒரு சாபகேடாகும். ஆகவே எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்படும் பொழுது எமது மலையக இந்திய வம்சாவளி மக்களினதும் தோட்டத் தொழிலாளர்களினதும் நலனை முன்நிறுத்தியே தீர்வு கானப்பட வேண்டும் என்பதே எமது தேர்தல் கோரிக்கையாகும். அதே போல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களின் வீடுகளும் அடிப்படை வசதிகளும் இன்று மீள் கட்டியெழுப்பப்படுகின்றது.

ஆனால் யுத்தமின்றி பலவருடகாலமாக சேதமடைந்திருக்கும் மலையக மக்களின் லயன் வீட்டுத் தொகுதிகளும் அடிப்படை வசதிகளும் எவராலும் மீள்கட்டியெழுப்பப்படவில்லை. இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான நிலங்களும் முறையான வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்த மூன்று பிரதான கோரிக்கைகளையும் ஏனைய பல தேவைகளையும் முன்னிறுத்தியே இம்முறை நாம் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றோம். வடகிழக்கு தமிழர்களின் அவல நிலைக்கு குரல் கொடுப்பவர்களை நாம் மதிக்கின்றோம். ஆனால் அதனை அரசியல் விளம்பரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துபவர்கள் மலையக மக்களின் அவல நிலையைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும். தேர்தல் நேரத்தில் மட்டும் மலையக மக்களுக்காக கண்ணீர் வடிப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

வடகிழக்கு தமிழ் மக்களின் கல்வி அறிவு மிகவும் சிறப்பானதாகும். அவர்களது பிள்ளைகளின் இரத்தத்தில் கல்வி அறிவு ஊட்டப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்பு பல ஆயிரக்கனக்கான கல்விமான்கள் வடக்கிலிருந்தே நாட்டிற்கு கிடைத்திருக்கின்றார்கள். இன்று யுத்தத்திற்கு பின்பு  மீண்டும் வடக்கிலிருந்து பல கல்விமான்கள் மீண்டெழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அத்தகைய ஒரு கல்வி சமூகத்தையே மலையகத்திலிருந்தும் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் செயல்படுகின்றோம். இதற்கு இந்திய அரசாங்கம் செய்து வரும் உதவிகள் அளப்பரியன. இருப்பினும் எமது மலைய சமூகத்திற்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகள் மென்மேலும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்கான அழுத்தத்தையும் நாம் வழங்குவோம'. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .