2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ம.தே.மு.வே மலையகத்தின் மறுமலர்ச்சி : சுரேஷ் கங்காதரன்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எமது மலையக தேசிய முன்னணிக்கு  மலையகத்தில் வாழும் அனைவரும்  பரவலாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த முன்னணியே மலையகத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

மலையகத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என களமிறங்கியவர்கள் எல்லோரும் இன்று தங்களது கொள்கைகளை தொலைத்து விட்டு பணத்திற்கும் பட்டத்திற்கும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துள்ளார்கள். பல கட்சிகளின் தலைவர்களும் தரம் குறைந்து போயுள்ளார்கள். அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறையும் வாக்களித்து வாக்களித்து ஏமாந்து போயுள்ளார்கள்.

இந்த சரித்திரம் மாற்றப்பட வேண்டும். மக்களுக்கு நேர்மையாக செயலாற்றக்கூடியவர்களை மலையக மக்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். வெறுமனே தொழிற்சங்க அடிப்படையில் வாக்களிப்பதை தோட்டத் தொழிலாளர்கள் நிறுத்த வேண்டும். தொழிற்சங்கத்திற்கும் அரசியலுக்குமுள்ள வித்தியாசத்தை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தாங்கள் சார்ந்த தொழிற்சங்கத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் மாறுவார்களேயானால் மட்டுமே மலையகத்தில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மலையக தேசிய முன்னணியில் நேர்மையான கட்சிகளே அணி சேர்ந்துள்ளன. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களே இம்முன்னணியை சுமந்து செல்கின்றார்கள்.

குறிப்பாக நாடாளுமன்றத்தில் 13 ஆவது திருத்த சட்டத்தின் மீது அரசாங்கம் கைவைக்க முற்பட்ட போது ஊடகங்களுக்கு முதன் முதலில் பகிரங்கமாக தமது எதிர்ப்பை தெரிவித்தவர் எமது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனேயாகும்.

அதே போல் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக  வீ.இராதாகிருஷ்னனும் தைரியமாக குரல் கொடுத்திருந்தார். இவர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டிற்கு சார்பாக  ஒருபோதும் கைதூக்கியதும் இல்லை.

கைதூக்கப் போவதும் இல்லை. இவர்களின் முயற்சியின் பெயரில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி இன்று நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தலைமையில் திறமையான நேர்மையான பல வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகளும் இடம்பெறுகின்றன. மக்கள் சேவகன் ரிஷி செந்தில்ராஜ் போன்ற படித்த இளைஞர்களும் இடம்பெறுகின்றனர். மலையக தேசிய முன்னணியின் வெற்றிக்கு மண்வெட்டி சின்னத்திற்கு பெருந்திரளாக அணிதிரண்டு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலமாகவே மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

13 ஆவது திருத்த சட்டமான மாகாணசபை முறைமையில் அரசாங்கம் கைவைக்க முற்பட்ட போது வாய்மூடி மௌணித்தவர்கள் இன்று இதே மாகாணசபையிலே அரச தரப்பினராக களமிறங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. மறுபுறம் கட்சியிலே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களிடம் பணம் வசூளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கட்சிகளும் களமிறங்கியிருப்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

ஆகவே இன்று நேர்மையான முறையிலே மக்களிடம் வந்து வாக்கு கோரும் எமது முன்னணிக்கு மண்வெட்டி சின்னத்தில் வாக்களித்து  பாரிய வெற்றியை பெற்றுக் கொடுப்பதன் மூலமாக மலையகத்தில் புதிய காற்றை வீசவைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .