2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'சில இயக்கங்கள் இன ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நாட்டில் இயங்கும் சில இயக்கங்கள் இன ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதி அமைச்சரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அஸ்கிரி, மல்வத்து மற்றும் ராமஞ்ஞா பீடங்களின் மஹாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கண்டி அஸ்கிரிய மஹா விகாரையில் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரான வண. உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரரையும் அல்வது மஹா விகாரையில்  மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரான வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரையும் மெனிக்ஹின்ன ஹுரீகடுவ வித்தியாசாகர பிரிவெனாவில்  ராமஞ்ஞ நிகாயாவின் மஹாநாயக்க நாபானே பேமசிரி தேரரையும் அமைச்சர் சந்தித்தார்.

பௌத்த தேரர்கள் சம்பந்தமான சட்டமூலமொன்று விரைவில் நாடாளுமன்றத்தில்; சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அது பற்றி மஹாநாயக்க தேரர்களின் கருத்தை அறியவும் நாட்டில் சில இயக்கங்கள் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளமையை பற்றி மஹாநாயக்க தேரர்களின் கவனத்திற்கு கொண்டுவரவும் மஹாநாயக்க தேரர்களை தான் சந்தித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமைச்சரவை ஏற்றுள்ளது. அதிலுள்ள விடயங்களைத் தெளிவுபடுத்துவதில் தவறில்லை. அத்துடன், ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கும் விடயங்கள் தொடர்பாக அதற்குரிய அங்கத்துவ நாடுகள் பதிலளிப்பது சம்பிரதாயம். எனவே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் கட்சி என்ற வகையில் நாம் சில விடயங்களை முன்வைத்தது தவறில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், கட்சித் தலைவன் என்ற அடிப்படையில்  கட்சி அங்கத்தவர்கள் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுப்படவேண்டியவனாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது, பொது பல சேனா பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ள ஐந்து அமைச்சர்களில்  நீங்களும் ஒருவர். நீங்கள் அதனை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? இது பற்றி என்ன கூறப் போகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,  பக்குவமாக நடந்துகொள்ளும் ஒருவருடன் கருத்துக்களை பரிமாறமுடியும்.  அதேபோல் நடுநிலை தவறாத பொது விவாதத்தை முன் நடத்தும் அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கமுடியும். ஆனால், சில ஊடக நிறுவனங்கள் தமது குறுகிய சிந்தனைகளை உள்ளே வைத்துக்கொண்டு உண்மைக்குப் புறம்பாக எம்மை இக்கட்டில் ஆழ்த்துவதை குறியாகக் கொண்டுள்ளன. அப்படியான நிலையில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. வம்பை விளைவிக்கும் ஊடகங்களுடன் கைகோர்ப்பதில் பயன் இல்லை எனக் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் ராமஞ்ஞா நிகாயாவின் மஹாநாயக்க தேரரான நாப்பான பேமசிரி தேரரை சந்தித்தார். நாப்பான பேமசிரி தேரர் தெரிவிக்கையில்,
'
நான் 1956ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டேன். அக்காலம் முதல் முஸ்லிம்களுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
அக்காலத்தில் வாழ்ந்த சிங்கள மரைக்கார் என்று செல்லமாக அமைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சீ.எஸ்.ஏ.மரைக்கார் போன்றவர்கள் சிங்கள – முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்தனர்.

எனது பக்கத்து ஊர்தான் மடவளை. நான் முஸ்லிம்களை நேசிக்கின்றேன். முஸ்லிம்களில் பலர் எமக்கு பக்கபலமாக உள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்துதான் எதனையும் சாதிக்க முடியும்.  எமது பிரச்சினைகளை கலந்துரையாட வேண்டும். ஒருவர் அதனை செவிமடுக்க வேண்டும். அப்போது தான் பிரச்சினைக்கு தீர்வு எட்டும்.

அதேபோல் புத்தரின் போதனைப்படி நாம் ஏதேனும் செய்வதாயின் பிறருக்கு அதனால் நன்மை ஏற்பட வேண்டும். இது அரசியலுக்கும் பொருந்தும். ஊடகங்களுக்கும் பொருந்தும். அமைச்சருக்கும் பொருந்தும்' என்றார்.

அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பௌத்த தேரர்கள் மற்றும் பௌத்த விகாரைகள் தொடர்பான சட்டமூலத்தை வரவேற்பதாகவும் அவர்; கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .