2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இ.தொ.கா தீர்த்து வந்துள்ளது

Kogilavani   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தொழிற்சங்கம் மூலமாக இற்றைக்கு எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள், அபிலாசைகள் ஆகியவற்றை  இனங்கண்டு அவ்வப்போது அவற்றை எட்டுவதற்கு அயராது பாடுபட்டு வந்துள்ளது. இவற்றில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இது எழுபத்தைந்து கால சேவை மனப்பக்குவம், தியாகம், ஆகியவற்றால் சாதிக்கப்பட்டவையாகும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர்களில் ஒருவரும் மத்திய மாகாண சபை அமைச்சருமான ராம் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.  அடுத்த சம்பள உயர்வுக்காக இ.தொ.கா. தக்க தருணத்தில் நடவடிக்கைளை மேற்கொள்ளும்.   

தோட்ட தொழிலாளர்களை வீதியில் இறக்கி பசி பட்டினி போட்டு அவர்களது பொருளாதாரத்துக்கு தடை ஏற்படாத வண்ணம் சாத்வீகமான முறையில் பிரச்சினைகளை அணுகுவதே இ.தொ.காவின் நிலைப்பாடாகும்.

தோட்ட தொழிலாளர்களை வீதியில் இறக்கி சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது என்பது ஒரு நாகரீகமற்ற செயலை குறிக்கின்றது. அண்மைய காலங்களில் தோட்ட தொழிலாளர்களை போராட்டங்களில் ஈடுபடுத்தி அவர்களை நட்டப்படுத்தி இறுதியில் எதனையும் சாதித்துக்கொள்ள முடியாத நிலையில் தமது இயலாமையை வெளிப்படுத்திய நிலைப்பாடுகளை  கடந்த காலங்களில் எம்மால்  அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும், அறிவும் பின்புலமும் பக்குவப்படாத அரசியல்வாதிகளுக்கு யதார்த்தமாக சேவையாற்ற முடியாது. இ.தொ.கா அணுபவ முதிர்ச்சியின் காரணமாக தளர்ச்சி அடையாமல் நடுநிலையில் நின்று எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாமல் சாத்தியப்பாடான நிலையில் கூட்டு ஒப்பந்தங்களை செய்துவந்துள்ளது.

அரச மட்டங்களிலும் முதலாளிமார் சம்மேளன மட்டங்களிலும் பல உடன்படிக்கைகளை செய்துள்ளது. இவற்றால் தோட்ட தொழிலாளர்கள் இதுவரை பல்வேறு நன்மைகளை அனுபவித்து வந்துள்ளார்கள்.


மூடுமந்திரமாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தினை இ.தொ.கா தன்னிச்சையாக மேற்கொண்டதில்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இ.தொ.காவை போல இதர சங்கங்களுடன் இணைந்து இவ் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

போலி வாக்குறுதிகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றாமல் அவர்களுக்கு அப்பழுக்கற்ற சேவையை இ.தொ.கா தொடர்ந்தும் மேற்கொள்ளும். மக்களுக்கு எவை தேவையோ அவற்றிலிருந்து இ.தொ.கா ஒருபோதும் பின்வாங்காது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவ படுத்தும் தொழிற்சங்கங்களையும் இணைத்து கலந்துரையாடி காத்திரமான ஒரு முடிவை எட்டிய பின்னரே தீர்க்கமான புதிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும். தனிப்பட்ட தன்னிச்சையான முடிவை இ.தொ.கா எடுக்கமாட்டாது. ஆரம்பகாலம் தொட்டு இ.தொ.கா அனுசரித்து வரும் இந்த கோட்பாட்டிலிருந்து சற்றும் விலகாதென்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தோட்ட தொழிலாளர்களுக்கு முடிந்தால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கட்டும் என ஒரு விட்டுக்கொடுப்பை கடந்த 2006ம் ஆண்டு இ.தொ.கா மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகியன மலையக தொழிற்சங்கங்களுக்கு அறிவித்திருந்தது.

ஆனால், அது அவர்களால் இயலா தன்மையை வெளிப்படுத்தியது. இறுதியில் தோட்ட தொழிலாளர்களை 14 நாட்கள் வீதியில் இறக்கி போராட்டம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்ததே தவிர வேறொன்றையும் காணமுடியவில்லை.

2002ம் ஆண்டு சம்பள உயர்வு போராட்டத்தின் போது அமரர் சந்திரசேகரன் கூட தம்மால் இந்த பாரத்தை சுமக்க முடியாது இ.தொ.கா வினால் தான் முடியும் என்பதை சுட்டிகாட்டியிருந்தார். இதனை அவர்களுக்கு இ.தொ.கா நினைவூட்ட விரும்புகிறது' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .