2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொலிஸார் வலைவீச்சு: பீதியில் கிறேட்வெஸ்டன் மக்கள்

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்  


தலவாக்கலை நகரில் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 4பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் தோட்ட மக்கள் வாழ்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


மேற்படி சம்பவத்துடன் தொடர்படைய 4பேர் தலவாக்கலை பொலிஸாரினால் கடந்த 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படி நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்பிரதேச மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை கிறேட்வெஸ்டன் தோட்ட பகுதியிலிருந்து, தலவாக்கலை நகருக்குச் சென்று முச்சக்கர வண்டிகளை செலுத்தும் பல இளைஞர்கள் தாமும் கைதுசெய்யப்படலாமென்ற அச்சத்தில் தொழிலுக்குச் செல்லாதுள்ளனர். இதனால் தாம் பல்வேறு வழிகளில் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமை (31) தலவாக்கலை பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடி  மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு பொலிஸாரே காரணமென கூறி தலவாக்கலை நகரில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது கலவரம் ஏற்பட்டதுடன் கலவரத்துடன் தொடர்புடைய பலரின் காணொலிகள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .