2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'மைத்திரிக்கே எமது ஆதரவு'

Gavitha   / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கே. ஜனாதிபதியை நம்பியே இ.தொ.கா., கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆறுமுகன் தொண்டமான் மஹிந்தவுக்கு  ஆதரவா, இல்லை மைத்திரிக்கு ஆதரவா என கேள்வி எழுப்பியிருந்தார். நீண்டநாள் அரசியலிலுள்ள ஒருவர் இவ்வாறு கேட்பது வேடிக்கையாகவுள்ளது' என்றார்.

'1970ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை இ.தொ.கா., ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டது.

மேலும், 2002இல் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விலகி, ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியது இவ்வாறு ஐ.தே.க.வுக்கும், இ.தொ.கா.வுக்கும் நீண்ட தொடர்பிருந்தும், பிரதமர் மேற்கண்டவாறு வினவியமை வேதனையளிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், இ.தொ.கா முன்வைத்த கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்  சம்பளம் பெற்றுக்கொடுத்தல், தனிவீட்டுத்திட்டம், தோட்டங்களை கிராம மயமாக்குதல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. தேர்தலின் பின் ஐ.ம.சு.கூ ஆட்சியமைத்தவுடன் நாம் இவ்விடயங்கள் தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்' என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் சிறுபான்மைக் கட்சிகள் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது. எனவே, ஆட்சியமைக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்று முத்துசிவலிங்கம் கூறியபோது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், தேர்தலில் ஐ.தே.க ஆட்சியமைத்தால்  ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவீர்களா என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், 'சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பவே அது குறித்து தீர்மானிக்கப்படும்' என்றார்.

'தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு தொட்டில் குழந்தை. ஆரம்பித்து மூன்று மாதங்களே ஆகின்றது. எனவே, இ.தொ.கா மீது மக்களுக்குள்ள நம்பிக்கை என்றும் குறைவடையாது. ஐனாதிபதி மைத்திபால சிறிசேன மீது இலங்கை தொழிலாளர்

காங்கிரஸூக்கு  முழு நம்பிக்கையுள்ளது. நிச்சயம் தேர்தலின் பின்னர் அவர் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்' என முத்துசிவலிங்கம் நம்பிக்கை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .