2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மலையக இளைஞர், யுவதிகள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்: அரவிந்தகுமார்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வெளிமாகாணங்களில் தொழில்புரிந்து வரும் மலையக இளைஞர், யுவதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வாக்களிப்பதற்கு கட்டாயம் சமூகம்தர வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார் கோரியுள்ளார்.

'தேர்தலில் வாக்களிப்பது என்பது எமது உரிமை. அவ்வுரிமையை நாம் முழுமையாக பயன்படுத்த  வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'பதுளை மாவட்டத்திலிருந்து சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள போதும், இவர்களில் பலர் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். இவர்களது வாக்குகள்,  தமிழர் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனை எமது இளைஞர், யுவதிகள் உணர்ந்து வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'பதுளை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 702 பேர் வாக்காளர்களாக இருந்து வருகின்றனர். இத்தகைய வாக்காளர்கள் இருந்தும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு தமிழ் பிரதிநிதித்துவமும் ஏற்படாது இருந்தமையானது துரதிஷ்டமாகும்;. தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமையினால், எமது சமூகம் அரசியல் அநாதையாக இருந்து வருவதை எமது இளைஞர், யுவதிகள் நன்கு அறிந்திருப்பர்.

எமக்கான சமூக பிரதிநிதித்துவங்கள், நாடாளுமன்றத்தில் இருக்கும் பொழுதுதான் எமது சமுகத்துக்கு உரிய கௌரவத்தையும், சமுக மேம்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம். 
நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. இவ்வகையிலான நிதி, கடந்த வருடத்தில் எமது சமுக மேம்பாடுகளுக்கு கிடைக்கவில்லை என்பதை மக்கள் நன்கறிவர். 

எனவே, நடைபெறப்போகும் தேர்தலிலாவது, எமது சமுக பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்தி கொண்டோமேயானால், பாரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். நடைபெறப் போகும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெறும் என்ற நிலைபாடுகள் இருந்து வருவதனால் அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் இரு தமிழ் வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்க வேண்டியது எமது மக்களின் தார்மீகக் கடமையாகும். 

கொழும்பு போன்ற வெளி மாகாணங்களில் தொழில்துறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எமது சமூக இளைஞர், யுவதிகள் சமூக நோக்கோடு நடைபெறப்போகும் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டியது அதிமுக்கியமாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .