2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையக மக்களுக்கு காணி வழங்குபவருக்கே வாக்கு :திகா

Gavitha   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 7 பேர்ச் காணியை வழங்க முன்வரும் அதிகாரம் கொண்ட வேட்பாளர்களுக்கு மலையக தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

  மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள முன்பள்ளிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிமை (12) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதற்கான காணிப் பிரச்சினை பிரதானமாக இருக்கின்றது. குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள, தலா 7 பேர்ச் காணி வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உண்டு. அத்தோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் மலையக மக்களின் வாக்குகள் தேவைபடுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வீதம் வழங்க யார் முன்வருகின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

நாட்டில் மாறி மாறி அரசாங்கங்கள் பதவிக்கு வந்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்தப்பாடில்லை. எனினும் பதவிக்கு வருகின்ற அரசாங்கங்களுக்கு மலையக மக்களின் வாக்குகள் அதிகமாகத் தேவைபடுகின்றது.

எனவே, நாம் வெறுமனே வாக்களிப்பவர்களாக மாத்திரம் இருக்காமல், எமது தேவைகளுக்குக் குரல் கொடுப்பவர்களாகவும் பேரம் பேசுபவர்களாகவும் மாற வேண்டும்.

 இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டியது மலையக அரசியல், தொழிற்சங்க அமைப்புகளின் தலையாய கடமையாகும். மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். இருந்தும் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையான காணிப் பிரச்சினையை வலியுறுத்தி, அதற்குத் தீர்வு  பெற்றுக் கொடுக்கும் வகையில் ஒன்று பட்டுக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

 மலையகத்தில் கம்பனித் தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 230 ஹெக்டயர் காணிகள் உள்ளன. அதேநேரம், 38 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு சுமார் 2 இலட்சம் வீடுகள் தேவைபடுகின்றன. இவற்றில் ஏற்கெனவே உள்ள லயன்கள் போக, சுமார் 23 ஆயிரம் நவீன வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளன. மேலதிகமாக  ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வீடுகள் தேவைபடுகின்றன. தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக 7 பேர்ச் காணி வீதம் வழங்க, 8 ஆயிரம் ஏக்கர் நிலம் மாத்திரமே தேவைப்படுகின்றது. இதில் தோட்டங்களில் உள்ள 3 வீத நிலப்பகுதி மாத்திரமே வீடமைப்புக்குத் தேவைபப்டுகின்றது.

  எனவே, இந்த நாட்டில் 200 வருட காலமாக தமது உழைப்பின் மூலம் அந்நியச் செலாவாணியை ஈட்டித் தருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புக்காக காணி வழங்க வேண்டியது கட்டாயமாகும். அதற்கு தரிசு நிலங்களை வழங்கினால் தோட்டங்களுக்கு நட்டம் ஏற்படப் போவதுமில்லை. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 7 பேர்ச் காணியை வழங்க முன்வரும் அதிகாரம் கொண்ட வேட்பாளர்களுக்கு, மலையக தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். அதற்கான அழுத்தத்தை மலையகத் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 லக்ஷபான தோட்டத் தலைவர் பி. பத்மநாதன் தலைமையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான ஜி. நகுலேஸ்வரன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எஸ். சிவானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .