2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனுஷா தலைமையில் புதிய கட்சி உதயம்

Kogilavani   / 2020 நவம்பர் 27 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனின் தலைமையில், மலையகத்தில் புதிய கட்சி ஒன்றும் தொழிற்சங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன.

'சந்திரசேகரன் மக்கள் முன்னணி' என்ற பெயரில் கட்சியும் 'அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி' என்ற பெயரில் தொழிற்சங்கமும் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடிச் சூழலில், பொதுவெளியில் கட்சியை அங்குரார்ப்பணம் செய்ய முடியாது என்பதால், ஊடகங்களினூடாக கட்சியையும் தொழிற்சங்கத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைப்பதாக, சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், 'காலத்துக்கேற்ற சமூக செயற்பாடுகளையும் அதற்கான நேர்மையான கருத்துகளையும் பதிவு செய்யாத எவராலும் மக்கள் செயற்பாட்டாளராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது" என்றார். 

சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி, ஆகிய அமைப்புகளின் செயற்பாட்டு நோக்கம் தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், 

'கடந்த பொதுத் தேர்தலில், எனக்கு நேரடியாக வாக்களித்த பதினேழாயிரத்துக்கும் அதிகமானோர் மற்றும் வாக்களிக்க முயற்சித்த ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொடுத்த ஆதரவினை தேர்தலோடு நான் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதற்கும் சமமாக இத் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வழங்கிய  ஆதரவின் வெளிப்பாடே இது.

'இதனை எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கிகாரமாக எடுத்துக்கொண்டு என் தந்தை வழியில் எனது மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளேன்.

'நான் எதிர்ப்பார்த்ததை விடவும் வஞ்சகம் நிறைந்த களமாக இது இருந்தாலும்கூட அதனை வென்று சாதிக்கும் மனோ தைரியத்தை என் தந்தை எனக்கு தினமும் வழங்குகிறார்.

'கற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை அல்லது தகுதியானவர்களுக்கு மக்கள் அங்கிPகாரம் வழங்குவதில்லை என்ற பிழையான  குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் தாகத்தை நான் தெளிவாகப்புரிந்துக் கொண்டுள்ளேன்.

'அர்த்தமுள்ள கருத்துகள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூறப்பட்டால் நிச்சயமாக இளைஞர்களை ஓரணித் திரட்ட முடியும் இதனை வரலாறு நிருபித்துள்ளது.

'தேர்தலில் போட்டியிட்டு வென்றோம் தோற்றோம் இனி அடுத்த தேர்தல் என்றில்லாமல் தேசிய அரசியலில் எமது சமூகத்தை இணைப்பதற்கு ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும்.

'பெருந்தோட்டத் துறைசார்ந்த இதுவரை அரசாங்கத்தின் பார்வையே படாத எம்  தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாது தொழிலாளர்கள் அல்லாத எமது மலையக உறவுகளையும் இணைத்துக் கொண்டு பயணளிப்பதற்காகவே இவ் இரு அமைப்புகளையும் அமைத்துள்ளேன். 

'அனைத்து பாகுபாடுகளுக்கும் அப்பால் மலையகம் என்ற அடித்தளத்தில் இருந்து ஏனைய அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து என் தந்தை எவ்வாறு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தினாரே அதே வழியில் எனது செயற்பாடுகளும்  அமையும். எனவே, கபடத்தன தலைமையில் வெறுப்புற்றுள்ள மலையக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி என் தந்தையின்  ஆதரவாளர்கள் என்பதால் ஒதுக்கப்பட்டவர்கள்,  அல்லது ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

'அதே போன்று எம் சமூகத்தின்  மாற்றத்துக்காக உணர்வோடு செயற்படும் அனைத்து சக்திகளும் எனக்கு ஆதரவு தருமாறு அழைக்கின்றேன். துணிவுடனும் தெளிவுடனும் செயற்பட்டால் மாற்ற முடியாது ஒன்றுமே இல்லை என உறுதி செய்வோம்' என்று தெரிவித்துள்ளார்.     

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .