2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அரச அதிகரிகளே முட்டுக்கட்டை’

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு, அரச அதிகாரிகளே இடையூறு விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டிய மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.ராம், ஜனாதிபதி, பிரதமர்,மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் நியாயமான நடவடிக்கைகளுக்கு இடையூறாக, அரச அதிகாரிகள் செயற்படுவதால், நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை, முறையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை நிர்வாகம், பொதுமக்களுக்கு திருப்திகரமாக இல்லையென்று, பரவலாகக் குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளரை, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் செயலாளராக நியமிப்பதற்கு, ஜனவரி மாதத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

எனினும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காரணமாக, இந்த இடமாற்றம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறிய அவர், தேர்தலுக்குப் பின்னர், கடந்த வாரம் அவருக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்டதெனவும் அம்பகமுவ மற்றும் ஹட்டன் - டிக்கோயா நகரசபைகள் இரண்டையும் கவனிக்கும் வகையில், இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும்  தெரிவித்தார்.

குறித்த அதிகாரி, கடந்த வாரம், ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குச் சென்று, தமது இடமாற்றக் கடிதத்தைக் காட்டி, வரவுப் புத்தகத்தில் கையொப்பம் இட்டுள்ளார். இருந்தும், அவரிடம் பொறுப்புகள் எதுவும் ஒப்படைக்கப்படவில்லையென்று, மாகாணசபை உறுப்பினர் ராம் தெரிவித்தார்.

22ஆம் திகதிக்குப் பின்னர், பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுமாறு, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால், மேற்படி அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, உள்ளூராட்சி ஆணையாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, தாம் அவ்வாறு எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து, நுவரெலியா உள்ளூராட்சி ஆணையாளரிடம் விசாரித்த போது, அவரும் உரிய பதிலை வழங்கவில்லை. மீண்டும் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்த போது, எழுத்துமூலம் முறைப்பாட்டைச் சமர்ப்பித்தால், தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, மத்திய மாகாண முதலமைச்சரிடம் கேட்டபோது, அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளருக்குக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதால், அவர் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லையென்று கூறியுள்ளார்.

எனவே, நல்லாட்சி அரசாங்கத்தில், ஜனாதிபதி, பிரதமர், மத்திய மாகாண முதலமைச்சர், ஆளுநர் முதலானோரின் நியாயமான நடவடிக்கைகளை அமுல்படுத்த, அரச அதிகாரிகள் தடையாக இருப்பதோடு, தமது பதவியையும் துஷ்பிரயோகம் செய்துவருவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.ராம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .