2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘ஆமாம் சாமி அவுட்’

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்   

“மலையகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்தவர்கள் என்ன செய்தார்கள்? 3 ஆண்டுகள் அமைச்சராக இருந்து நான் என்ன செய்துள்ளேன் என்பதை சிந்தித்துப் பார்த்து, மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான ப.திகாம்பரம் தெரிவித்தார்.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச சபைக்கு போட்டியிடும் ஐ.தே.கட்சி வேட்பாளர்களான எம்.இரவீந்திரன், எஸ்.செல்லத்துரை, ஆர்.இராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து, புளியாவத்தை நகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.   

இங்கு மேலும் கூறிய அவர்,   

 “மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த காரணத்தால்தான் அரசியலில் படிப்படியாக உயர முடிந்தது. எனவே, எனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் அவர்களின் தேவையறிந்து சேவை செய்து வருகின்றேன்.   

“ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களில் நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அதில் மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பங்கும் அளப்பரியது.

“இந்நிலையில், திகாம்பரத்துக்கு வாக்களித்த காரணத்தால்தான் சம்பள உயர்வையோ, ஏனைய உரிமைகளையோ பெற்றுக்கொடுக்க முடியாமற் போனதாக, மலையக அரசியல்வாதிகள் சிலர் புலம்பிக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றார்கள். இதில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பதை, மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   

“நான், அரசியலுக்கு வந்த 14 வருடங்களில் கடந்த 3 ஆண்டுகளாகத்தான் நிம்மதியாக இருக்கின்றேன். நான், மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வந்த போதிலும் மக்களுக்கு சேவை செய்ய விடாமல், இடையூறு செய்வதிலேயே சிலர் காலத்தைக் கழித்து வந்தார்கள்.

“நுவரெலியாவில் கறுப்புக் கண்ணாடி அணிந்தவரும் பதுளையில் கறுப்புக் கண்ணாடி அணிந்தவருமே, எனது இரு எதிரிகள். அவர்கள் இருவருக்கும் எமது  மக்கள் தொடர்ந்து பாடங்கற்பித்து வருகின்றனர். கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துக்கொண்டு பார்க்கும் போது,  மலையகத்தின் அபிவிருத்திக் கண்களுக்குத் தெரிவதில்லை.

“பெருந்தோட்ட மக்கள், கடந்த 75 வருடங்களாக ஏமாற்றப்பட்டுவிட்டனர். இனியும் அம்மக்களை ஏமாற்ற முடியாது.  எமது மக்களை ஏமாற்றியதற்கான பயனை, தொழிற்சங்க அரசியலை மேற்கொண்டவர்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அவர்களை இரண்டு பேரென மட்டுப்படுத்தி, பாடம்புகட்டிவிட்டனர்.

 “இன்று நிலைமை மாறிவிட்டது. மக்களின் மன நிலையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடும் நிலையில் இன்று எவரும் இல்லை. அதன் பயனாக மலையக அரசியலிலும் தேசிய அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  எமது மக்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர்கள்  என்பதால், ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியடையும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை”


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X