2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழுந்து ஏற்றிச்சென்றோர் மீது தீயணைப்பு கருவியால் தாக்குதல்

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், எஸ்.கணேசன்

 

தொழிற்சாலைக்கு கொழுந்தை ஏற்றிச்சென்ற தொழிலாளர்கள் இருவர் மீது, அந்தத் தொழிற்சாலையில்
க​டமையிலிருந்த தொழிற்சாலை முகாமையாளரான டீ மேக்கர், தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் ​தொழிலாளர்கள் இருவர் பாதிக்கப்பட்டனர். அவ்விருவரும், மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்தச் சம்பவம், சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத்திலே, திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெய்வகந்த, சூரியகந்த, குமரித்​தோட்டம், அவரவத்த, தொங்கத்தோட்டம் மற்றும் மின்னா ஆகிய ஆறு ​தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று (09) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தாக்குதல் நடத்தியவரை, ​​தோட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி, தொழிற்சாலைக்கு முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.   
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத் தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்தை, ஆறு தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு, தொழிற்சாலைக்குச் சென்றுள்ளனர். கொழுந்துகளைப் பார்த்த, தொழிற்சாலை முகாமையாளரான டீ மேக்கர், கடும் கோபமடைந்துள்ளார்.   

இது என்ன, முற்றிப்போன கொழுந்துகளை ​ஏற்றிக்கொண்டு வந்துள்ளீர்கள், இறாத்தலும் குறைவாக இருக்கிறது என, சத்தம் போட்டுள்ளார். ஒரு கட்டத்தில், கடும் கோபமடைந்த அவர், தொழிற்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தீயணைப்புக் கருவியைத் தூக்கி, அந்த ஆறு தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போதே, இருவர் காயமடைந்துள்ளனர்.   

இந்நிலையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும், அந்த டீ மேக்கரை, மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்தனர். எனினும், தனக்கு சுகமில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   

இது இவ்வாறிருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை, தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக, தோட்ட நிர்வாகம் உறுதியளித்தது. இதனையடுத்தே, தொழிலாளர்கள் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைவிட்டனர்.   

இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .