2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தனித்துப் போட்டியிட்டால் முகத்திரை கிழிக்கப்படும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மலையக கட்சிகள் அவரவர் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டால், மலையக மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பது தெரியவரும். அப்போது சில நபர்கள் சொல்லும், மலையகம் எங்கள் பக்கம் என்ற முகத்திரை கிழிக்கப்படும்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா - பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட சனசமூக நிலையத்தின் திறப்பு விழா, நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அவரவர் தனது கட்சியில் போட்டியிடுவார்களேயானால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடும். தைரியம் இருந்தால், சவாலானவர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பார்க்கவும். இந்தச் சவாலுக்கு நான் தயார்.

“காங்கிரஸ், அதன் சின்னத்தில் போட்டியிடும். மலையக மக்கள் யார் பக்கம் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உணர்த்தும். மலையக மக்களுடைய அன்பும், பாசமும் இ.தொ.காவுக்கு நிறைந்துள்ளது. அப்போது, மலையக மக்கள் எம்முடன் என்று நின்றுச் சொல்லுபவர்களின் முகத்திரை கிழித்தெறியப்படும்.

“இவரும் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர் என்று பலராலும் சொல்லப்படலாம். ஆனால், சேவல் சின்னம் யானையிலும், நாட்காலியிலும் போட்டியிட்டுள்ளது. இன்று பலப்பரீட்சை வந்ததால், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனியாக நின்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது செல்வாக்கைக் காட்டும்” என்றார்.

“மலையக மக்களைப் பாதுகாப்பது ஐயாவின் கனவாகும். அந்தவகையில், இ.தொ.கா என்ற ஸ்தாபனம், இந்திய வம்சாவளி மக்களை இதுவரை பாதுகாத்தது போல் தொடர்ந்தும் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளது.

“கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், அலை ஒன்று அடித்தது. அது சுனாமியாக மாறி அவ்வாறாகவே சென்றுவிட்டது. எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சவாலை கட்சிகளுக்கு விடுக்கின்றேன். நானும் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிடத் தயாராகவுள்ளேன்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .