2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தமிழரசுக் கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்’

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

“வட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையை, மென்மேலும் தொடரவிடாமல் நிவர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும், தமிழரசுக் கட்சிக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணராமல் செயற்படுமேயானால், பாரிய விளைவுகளை அக்கட்சி எதிர்நோக்க நேரிடும்” என்று, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இரா.சலோபராஜா குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 

“இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளிலும் சிறந்ததோர் மாகாண சபையாக வடமாகாண சபை விளங்கியது. வட மாகாண சபையின் முதல்வராக ஓய்வுபெற்ற நீதியரசர் நியமிக்கப்பட்டமையானது, ஆரோக்கியமானதோர் சூழலைத் தோற்றுவித்தது. ஏனைய மாகாண சபைகள் அனைத்தும் வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வந்தன.

“எமது மலையக மக்கள்கூட அதன் செயற்பாடுகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.  அத்துடன், எமது நாட்டை பொருத்தமட்டில் தமிழர்கள் செறிந்துவாழும் மாகாண சபை என்பதினாலேயே, இந்த எதிர்பார்ப்பு, எம்மக்கள் மத்தியில் காணப்பட்டது.

“ஊழல் மோசடிகள் அற்ற நல்லாட்சியுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையே, வடமாகாண முதலமைச்சர் மேற்கொண்டார். இதனை ஒரு சிலர் விரும்பாததனாலேயே, வடமாகாண சபையில் நெருக்கடிநிலை தோன்றியுள்ளது.  வடமாகாண மக்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.

“அவர்களது காணிப்பிரச்சினை, இராணுவத்தை வெளியேற்றும் பிரச்சினை, பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பின்மை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்றெல்லாம் பல்வேறு பிரச்சினைகளை, வடமாகாண மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். நல்லாட்சி ஏற்படக் காரணமாக இருந்த வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை நிவர்த்திசெய்ய வேண்டியது வடமாகாண சபையினரினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடப்பாடுகளாகும். 

“எனவே, வடமாகாண சபையில், ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை நிவர்த்திசெய்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது கடமைகளை முன்னரைவிட திறம்படவும் சிறப்பாகவும் மேற்கொள்ள வழிவகைகள் செய்யப்படல் வேண்டும்.  தவறின, ஒற்றுமைக்கும் ஐக்கியத்துக்கும் சிகரமாக விளங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுபடுவதை எவராலும் தடுத்துவிடமுடியாது என்பதுடன், தெற்கிலுள்ள இனவாதக் குழுக்களுக்கு, வடக்கு மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகள் இனவாதத்துக்கு தீனிபோடுவதாகவே அமையும்.
“எனவே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தலைமையிலான குழுவினரும் மற்றும் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டக் குழுவினரும், சுமூகப் பேச்சுவார்த்தைகளை விட்டுக்கொடுப்புகளுடன் மேற்கொண்டு, ஆரோக்கியமானதோர் சூழலை தோற்றுவிக்கவேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .