2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாண்டி சாதிக்க தடுமாறுகின்றனர்

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தனுஷன் ஆறுமுகம் LL.B (Hons)

[‘மலையகப் பாடசாலைகளின் பிரச்சினை குதிரைக் கொம்பல்ல’ எனும் தலைப்பில் நேற்று (04) வெளியான கட்டுரையின் தொடர்ச்சி]

மலையகப் பாடசாலைகளில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை ஏனைய சிறுபான்மை சமூகங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிகக் குறைவு.   

அதுபோலவே, கல்வி சாராத் துறைகளில் (விளையாட்டு, கலை, இலக்கியம், ஏனைய) சாதிக்கும் தரப்பினரின் எண்ணிக்கையும் குறைவு. குறிப்பாக, விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதிகமான மலையகப் பாடசாலைகளில் மாணவர்களைப் பயிற்றுவிக்க உரிய பயிற்சியாளர்கள் இன்மை பாரிய குறைபாடாகும்.   

அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அரசமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம், இங்கே எவ்வாறு சமவாய்ப்பை உறுதிப்படுத்துகின்றது. காலியில் ஒரு பாடசாலையில் பயிற்சி பெற்று, இலங்கை கிரிக்கெட் அணிக்கு, ஒரு மாணவன் தெரிவாக முடிகின்றது எனின், மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாடத் தெரியாத அல்லது அதில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் என்றா கூறப் போகின்றோம்?  

 இல்லை! வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். கிரிக்கெட் மட்டுமல்ல, இப்படி ஒவ்வொரு விளையாட்டு மற்றும் போட்டிகள் தொடர்பில் வழிகாட்டல்களும் பயிற்சிகளும் இல்லாத நிலையால் எமது மாணவர்கள் பின்னிற்கின்றார்கள் என்பதே தவிர, திறமையற்றவர்கள் என்பது அர்த்தமல்ல.  

 இந்தத் தடைகளைத் தாண்டிச் சாதிக்கும் சிலர் இருப்பினும், அந்தத் தடைகளைத் தாண்டிச் சாதிக்கத் தடுமாறும் பலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக விளையாட்டுத் துறையைப் பொறுத்த வரையில், அருகாமைப் பாடசாலைகளை இணைத்துப் பயிற்சிகளை வழங்கக் கூடிய வண்ணமாவது பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.  

இவ்வாறாகப் பிரச்சினைகள், சிக்கல்கள், வளப்பற்றாக்குறை என்ற அத்திபாரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பாடசாலையிலிருந்து வெளிவரும் மாணவனும், சகல வசதிகள் படைத்த பாடசாலைகளில் இருந்து வெளிவரும் மாணவனும் சமூகத்தில் ஒரே போட்டியை எதிர்நோக்கப் போகின்றார்கள்.  

 போட்டி என்ற விதத்தில் சம வாய்ப்பு என்றாலும், போட்டியாளர்கள் சமமானவர்கள் இல்லை. எனவே, இங்கு சமத்துவமற்ற ஒரு போட்டி நிலைமையே காணப்படுகின்றது.   

ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக அவசியமானது. 1944களின் பிற்பட்ட காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வி, மலையக சமூகத்தை வந்தடைய மேலும் பல வருடங்கள் கடந்தன. அந்தத் தாமதம், இன்னும் நாம் தேசிய நீரோட்டத்துடன் கலப்பதிலிருந்து, எமது சமூகத்தைத் தாமதப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.   

இந்நிலைமையிலிருந்து நாம் மீண்டு, விடிவு பெற, எமது பாடசாலைகளின் கட்டமைப்புகளும் நோக்கங்களும் சமூக மாற்றத்தை நோக்கியதாகத் திறம்பட மாற்றியமைக்கப்பட வேண்டும்.   

உரிய ஆசிரிய நியமனங்களை வழங்க, எமது தலைமைகள் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பதோடு பாடசாலைக் கட்டமைப்பு, மாணவர் ஆலோசனை வழிகாட்டல், தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட விடயங்களுக்குப் பாடசாலைச் சமூகமும் அதைச் சூழவுள்ள சிவில் சமூகமும் முன்வர வேண்டும்.   

இறுதியாக, கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வர, அதிக கற்பித்தல் நேரமும் முறையற்ற கற்பித்தலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெற்றி தராது என்பதை வலியுறுத்திக் கொண்டு, தேசிய நீரோட்டத்தில் எமது சமூகத்தை இணைத்துக் கொள்ளக் கரம் கொடுக்க, தரமான கல்வி கொடுக்க, ஆசிரியர்களும் பாடசாலை சமூகமும் முன்வர வேண்டும். அபிவிருத்தி என்ற பெயரில் கட்டட கட்டுமானங்களையும் சில்லறை (சமூக ரீதியாக) செயற்பாடுகளையும் செய்து கொண்டு, மார்தட்டும் அரசியல்வாதிகள், கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த உரிய திட்டங்களையும், நிதி ஒதுக்கங்களையும் செய்ய வேண்டும்.   
மலையகத்துக்குத் தனியான பல்கலைக்கழகமெனத் தேர்தல் காலங்களில் கூவித்திரிவோர், முதலில் பாடசாலைகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு நிகரான வாய்ப்புகள் எம் மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.  கல்வித் துறையில் ஏற்படப் போகும் மாற்றமே, எமது சமூகத்தின் உண்மையான மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கு அத்திபாரம் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .