2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவின் அழகு சீர்குலைய பொலிஸாரின் நடவடிக்கையே காரணம்

Editorial   / 2018 மே 08 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

பொலிஸாரின் நடவடிக்கையினாலேயே, நுவரெலியாவின் அழகு சீர்குலைந்ததாக, சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், மேதின கூட்டம் நேற்று முன்தினம் (07), நுவரெலியா கவிதாஸ் கட்டிட தொகுதிக்கு அருகிலுள்ள, நுவரெலியா மாநகர சபையின் கீழ் இயங்கும், பிரதான வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றது. இதன்போது, இப்பகுதியில் நுவரெலியாவின் வசந்தகால நிகழ்வுக்காக, நுவரெலியா மாநகர சபையினூடாக வளர்க்கப்பட்டிருந்த பூமரங்கள் மற்றும் அழகான மரவகைகளை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடைத்தும் மிதித்தும்  பிடிங்கியும் நாசமாக்கியுள்ளதாகவும், இதனால் நுவரெலியா நகரின் மத்திய பகுதியின் சில இடங்களின் அழகுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இதேவேளை, இ.தொ.காவின் மேதின கூட்டத்துக்கான ஏற்பாட்டு குழுவின் உறுப்பினரும், நுவரெலியா மாநகரசபை உறுப்பினருமான, சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜன், இது தொடர்பில் ​நேற்று (08) காலை விளக்கமளிக்கையில்,

“நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதன் 76ஆவது மேதினத்தை அனுஷ்டிக்க, காங்கிரஸின் உயர்மட்டக் குழு தீர்மானம் எடுத்ததன் பின், நகரில் இடத்தை ஒதுக்க, நுவரெலியா மாநகரசபையின் அனுமதிக்கு, விண்ணப்ப கடிதம் வழங்கப்பட்டது. நகரின் பிரதான வீதியில், வழமைப்போல மேதின மேடையை அமைக்கவே, அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதனையேற்ற மாநகரசபையும், மாநகர முதல்வரும் அனுமதியை வழங்கினார்கள். அதற்கிடையில் பொலிஸ் உயர்மட்ட ஆதிகாரிகள், எம்மை அழைத்துப் பிரதான வீதியை மறித்து, மேடையமைக்க வேண்டாம். மாறாக பிரதான வாகன தரிப்பிட வளாகத்தில் மேடையமைக்குமாறு தெரிவித்தனர்.

பொலிஸ் உயரதிகாரிகளின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து, மேதின மேடை அவர்கள் கூறிய இடத்திலேயே அமைக்கப்பட்டது. ஆனால் மேதின கூட்டத்துக்கு வருகை தந்த பெருந்திரளான மக்கள், நிற்பதற்குக் கூட இடமில்லாத காரணத்தால், நகரின் பிரதான வீதிகளை மறித்து நிற்கவேண்டியதாயிற்று. இதன் காரணமாகவே நகரில், பார்வைக்கிடமான இடங்களில் வளர்க்கப்பட்டிருந்த பூக்கன்றுகள் மற்றும் மரங்கள் ஆகியவை, பழுதாக்கப்பட்டு ஆழகுக்கு சீர்குலைவு ஏற்படும் நிலை உருவானது” என்று தெரிவித்தார்.

மேலும், “கடந்த இரண்டு முறை, பிரதான வீதியை மறித்து மேடை அமைக்கப்பட்டு, மேதினம் நடத்தப்பட்ட காலப்பகுதியில், எந்தவொரு பாதிப்புகளோ, பிரச்சினைகளோ இடம்பெறவில்லை” என்று குறிப்பிட்ட அவர், “இம்முறை இயற்கை அழகுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு, வித்திட்டவர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் என்பதை அடித்துக் கூறுகிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .