2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நோர்வூட் ஆடைத் தொழிற்சாலை விவகாரம்; ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனரென்றும், எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் சில யுவதிகள், கடந்த திங்கட்கிழமை, திடீரென அச்சமடைந்துள்ளதுடன் கூக்குரலிட்டு அலறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமுற்ற நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொழிற்சாலையில் காற்றோட்டம் அற்ற நிலையில் யுவதிகள் தொழில் புரிந்து வந்தமையே இதற்குக் காரணமென கண்டறியப்பட்டதுடன், அதன் பின்னர் தொழிற்சாலை காற்றோட்டமிக்கதாக மாற்றியமைக்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.

எனினும், மீண்டும் பணிக்குத் திரும்பிய யுவதிகள் வேலை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர், ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக்கொள்வதும் கழுத்துப் பகுதியை இறுக்கிப் பிடிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி, கூக்குரலில் அலறிக் கத்துவதும், கூச்சலிட்டுப் புன்னகைப்பதுமான செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிப்புரியும் 20 யுவதிகள், இவ்வாறான செயல்களில் ஈடுபட்டமையால் ஏனையவர்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேறியதோடு, கூச்சலிட்டவர்கள் மட்டும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அனைவரும் வெளியேறியப் பின்னர், கூச்சலிட்டவர்கள் தொழிற்சாலை முழுவதும் ஓடித்திருந்து தமது விருப்பத்துக்கு சத்தமிட்டு கதைப்பதும், காற்றிடைவெளியில் சைகையில் உரையாடுவதும் புன்னகைப்பதுமாக செயற்பட்டுள்ளனர்.

யுவதிகளின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களும் வரவழைக்கப்பட்டனர்.

யுவதிகளை சிகிச்சைக்குட்படுத்திய வைத்தியர்கள், யுவதிகள் பயந்த நிலையில் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். இதன்பின்னர், யுவதிகளுக்கு மனநல சிகிச்ச அளிக்கப்பட்டுளள்து.

ஆடைத்தொழிற்சாலைக்கு அருகிலுள்ள முனீஸ்வரர் ஆலயத்துக்கு, வருடந்தாம் பூஜைகள் நடதப்படுவதாகவும் ஆனால், அண்மை காலமாக முனீஸ்வரர் ஆலய வழிபாடு செய்யாமல் விடப்பட்டதாகவும், இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையில் பணிபுரியும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளதாகவும் எனவே, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X