2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நோர்வூட் பாதிப்புகளுக்கு யார் காரணம்?

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- இராமன் நிக்ஷன் லெனின் 

இயற்கையின் மூலம் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கும் போது, ‘இயற்கை அருளிய கொடை’ என இயற்கையைப் புகழ்கின்றோம்.   

மாறாக, இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் அனர்த்தத்தின் போது, இயற்கையை வஞ்சிக்கின்றோம். ஆனால், அந்த அனர்த்தத்துக்கு ஏதோ ஒரு வகையில் நாம்தான் காரணம் என்பதை நினைத்துப் பார்த்து, ஏற்றுக் கொள்ள மறந்து விடுகின்றோம்.   

மனித செயற்பாடுகளின் விளைவே, கடந்த 2017-11-30 அன்று காலை 6.45 மணியளவில் திடீரென நோர்வூட் பிரதேசத்தைத் தாக்கிய வெள்ளம், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், நோர்வூட் பிரதேசத்துக்கு வெள்ளம் ஒன்றும் புதிய விடயமல்ல; கடந்த 1974 ஆண்டளவில் மிகப் பாரிய வெள்ளப்பெருக்கு நோர்வூட் நகரத்தைத் தாக்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.  

 

அவற்றை, இன்றைய இளைய தலைமுறைகள் கண்டிராத போதும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாத்திரம், மூன்று முறை நோர்வூட் பிரதேசத்தை, வெள்ள அனர்த்தம் தாக்கியுள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.   

கடந்த கால அனர்த்தங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தியமை போலவே, இம்முறை (2017-11-29) ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது, தெய்வாதீனமாக உயிராபத்து எதுவும் ஏற்படாத போதிலும், இலட்சக்கணக்கான சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.   

வெள்ளம் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்கள், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பதிவான தகவல்களின்படி, 87 குடும்ப‍ங்களைச் சேர்ந்த 381 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், பால் ரீதியிலான மற்றும் வயது அடிப்படையிலான புள்ளிவிவரம் இக்கட்டுரை எழுதப்படும் வரை சரியாகக் கிடைக்கவில்லை.   

எனினும், அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்கள் ஐவர், தமது புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஐம்பதுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், தமது கற்றல் உபகரணங்கள் அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.   

இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்பட்டவுடன் அரசியல் தலைமைகளும் அவர்களின் பிரதிநிதிகளும் படையெடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாப வார்த்தைகளை வாரி இறைப்பதும் வழக்கமாகி விட்டது.   

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் என்பவற்றை வழங்குவதோடு, தமது முன்னெடுப்புகளை முடக்கிக் கொள்வது கடந்தகாலப் பதிவுகளாகும்.   

தொழிலின்றி வறுமையில் வாடும் ஒருவருக்கு, ஒரு வேளை உணவை வழங்குவதை விட, உழைக்க வழிசமைத்துக் கொடுப்பதே சாலவும் சிறப்பானதாகும்.  

அதேபோன்று, தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படும் எம்மக்களுக்காக, அந்தநேரத்தில் சொற்ப பொருட்களை வழங்கி, தாம் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என மார்தட்டிக் கொள்வதை விடுத்து, அந்த அனர்த்தத்துக்கான புவியியல் ரீதியான காரணிகளைக் கண்டறிந்து, அதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதே பொருத்தமான செயலாகும்.   

அண்மைக் காலங்களில், தொடர்ச்சியாக நோர்வூட் பகுதியைத் தாக்கி வரும் வெள்ள அனர்த்தத்துக்கான காரணிகள் பற்றி ஆராய்வது காலத்தின் தேவையாகும். பின்வரும் இரு பிரதான காரணங்கள் இந்த வௌ்ள அனர்த்தத்துடன் தொடர்புபட்டுள்ளன.   

1. அனுமதிப் பத்திரத்துடனும், சட்டவிரேதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு.  

2. முறையற்ற வடிகாலமைப்பும் உரியவர் தமது கடமையைச் சரியாகச் செய்யாமையும்.  

அந்தவகையில், தொடர்ச்சியாக பொகவந்தலாவ பிரதேச தோட்டப்பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுக்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இதன்போது, மிகவும் பாரியளவிலான குழிகள் தோண்டப்படுகின்றன. இதில் அகழப்படும் மண் ஆங்காங்கே குவிக்கப்படும் போது, அவை சாதாரண மழைக்காலங்களில் அரிப்புக்குள்ளாகி பள்ளத்தாக்குகளில் படிந்துவிடுகின்றன.   

இவ்வாறு அரிப்புக்குள்ளாகும் மண், நோர்வூட் பிரதேசத்தை ஊடறுத்து ஓடும் ‘கெஷல்கமுவ ஓயா’வில் படிகிறது. இதன்போது, ஓயாவின் ஆழமும் அகலமும் குறைவடைகின்றன. இதனால், பலத்த மழைக்காலங்களில் நீர்மட்டம் மேலுயர வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது.   

முறையான வடிகாலமைப்புப் பற்றி நோக்கும்போது, நோர்வூட் பகுதிகளில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை இன்று பன்மடங்கு பெருகியுள்ளது. அதற்கமைய குடியிருப்புகளும் ஆங்காங்கே பெருகி விட்டன.   

இதன் காரணமாக நீர் வடிந்தோடக்கூடிய வடிகால்கள் மறிக்கப்பட்டும் அதில் நீர் ஓடும் வேகம் குறைவடைந்தும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இது தொடர்பாக முறையாகப் பராமரித்து, அதைச் சுத்தப்படுத்த வேண்டிய உள்ளூராட்சி சபைகளும் தமது கடமைகளிலிருந்து விடுபடும் போது, நீர் தேங்கும் நிலை ஏற்படுகின்றது.   

இந்நிலை தொடரும் போது, பலத்த அடைமழை காலங்களில் நீர் மட்டம், நீர் நிலைகளுக்கு மேலாக உயர்வடைந்து, நிலத்துக்குப் பாய்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.   

எனவே, இவ்விரு காரணிகளையும் கவனத்தில் கொண்டு, அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து, இதைக் கொண்டு அரசியல் நடத்துவது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.   

ஆக இனியும், இப்பகுதியில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின், பின்வரும் விடயங்களைக் கருத்தில் கொண்டு செயற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.   
1. அகழ்வு நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்குவதற்கு முன், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பாக, நன்கு ஆராய்ந்து தீர்மானம் எடுத்தல்.  

2. முறையான வடிகால் அமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, வடிகால்களைப் பொருத்தமான முறையில் உரிய காலங்களில் சுத்தம் செய்தல்.  

3. ‘கெஷல்கமுவ ஓயா’ ஆற்றை உடனடியாகத் தூர்வாரி, ஆழத்தையும் அகலத்தையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.  

4. கட்டடங்களை அமைப்பதற்கு அனுமதிகளை வழங்கும்போது, அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டும் அனுமதி அளித்தல்.    

எனவே, பாதிப்புக்குள்ளான பொது மக்களை, இனிவரும் காலங்களிலும் கண்ணீர் வடிக்க வழிவகுக்காது, ‘கெஷல்கமுவ ஓயா’ ஆற்றின் நீர் மட்டம் உயராதிருக்கப் புவியியல் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும். இதைக் கவனத்தில் கொண்டு, பொறுப்புடைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .