2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பெருந்தோட்டத்துறை நவீனமயப்படுத்த வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத்துறை நவீன மயப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அத்துறையில் தொழில்புரியும் ஊழியர்களின் பதவி நிலையும் மேம்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கூறிய அவர்,

“எமது நாட்டிலே பதவி உயர்வு, மேம்பாடு இல்லாத ஒரேயொரு தொழிற்றுறையென்றால் அது பெருந்தோட்டத்துறைதான். 18 வயதில் தோட்டத் தொழிலாளியாக செல்லும் ஒருவர் ஓய்வுபெறும்வரையில் தோட்டத்தொழிலாளியாகவே வேலை செய்யவேண்டும். ஆற்றல், அனுபவம் இருந்தால்கூட அவர்களால் முன்னேறமுடியாத அவலநிலைமை காணப்படுகின்றது. 

“இந்நிலைமை மாறவேண்டும். கவ்வாத்து வெட்டுவதற்கு இயந்திரம் வந்துவிட்டது, கொழுந்து அறைப்பதற்கு நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. இவ்வாறான விடயங்களின்போது நவீன விடயங்களை உள்வாங்கும் பெருந்தோட்டக் கம்பனிகள், தொழிலாளர்கள் விடயத்தில் மாத்திரம் வெள்ளைக்கார ஆட்சி மனப்பான்மையில் இருந்து இன்னும் மாறவே இல்லை.

“எனவே, பெருந்தோட்டத்துறையில் முதலில் தொழிற்பிரிப்பு இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்ற பின்னர் தொழிலாளர்களின் அனுபவத்துக்கேற்ப அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும். இதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதுத் தொடர்பில் நாம் திட்டங்களை வகுத்து வருகின்றோம். விரைவில் கம்பனிகளிடம் அவற்றை ஒப்படைப்போம். ஏனெனில் நவீன தொழில்நுட்பங்களையும் உள்வாங்கிக்கொண்டு, தொழிலாளர்களையும் முன்னேற்றும் வகையிலேயே பெருந்தோட்டத்துறையைக் கட்டியழுப்பவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

“பெருந்தோட்டத்துறையில் ஆரம்பகாலத்தில் பல இலட்சம்பேர் வேலை செய்தனர். இன்று அந்த எண்ணிக்கை ஒன்றறை இலட்சமாகக் குறைந்துள்ளது. பெருந்தொட்டத்துறையில் வேலை செய்வதை பலர் விரும்புவில்லை. ஒரு கூலித்தொழிலாகவே பார்க்கின்றனர். எனவே, கௌரவம்மிக்க தொழிற்றுறையாக அது மாற்றப்படவேண்டும். நவீன யுகத்துக்கேற்ப தொழில்புரிப்புகள் இடம்பெற்றால் இளைஞர்களும் வேலைக்கு வருவார்கள். 

“தோட்டத்துறையில் ஆண்களுக்கு ஒரு மணிவரையே வேலை வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் சிறுதோட்ட தொழிலில் ஈடுபடலாம். எனவே, தோட்ட காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் எல்லாம் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடவேண்டும் என நான் கூறவரவில்லை. பெருந்தொட்டத்துறையைவிடவும் கஷ்டமான வேலையில் குறைந்த சம்பளத்தில் வெளியிடங்களில் பலர் வேலைசெய்கின்றனர். அவர்களுக்கு மாற்று தேர்வாக இது இருக்கும் என்றே கூறமுற்படுகின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X