2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 3,800 ஆசிரியர்களை நியமக்க நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா   

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக, கடந்த 3 வருடங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென, விரைவில் 3,800 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதெனவும் தெரிவித்தார்.  

மேற்படி ஆசிரியர் நியமனங்களுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, அனுமதிக் கிடைக்கப்பெற்றுள்ளதெனத் தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்துக்கு, 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரத்தை வழங்கும் நிகழ்வு, பாடசாலையில், நேற்று (28) நடைபெற்றது.  

பாடசாலையின் அதிபர் கே.விஜயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,   

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ், பாரதி மகா வித்தியாலயத்தில், 35 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரு கட்டடங்களின் நிர்மாணப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை நான் நேரடியாக அவதானித்தேன்.   

“சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, குறித்த கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என அவர் இதன்போது உறுதியளித்தார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்துச் செயற்பட்டு வருவதால், மலையக மக்களுக்கு, தொடர்ந்தும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளதெனத் தெரிவித்த அவர், தாம் அன்று தொட்டு இன்றுவரை, தமது சமூகத்தின் அபிவிருத்திக்காகவே செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

இதற்கமைவாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு, எதிர்வரும் நாட்களில், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளன எனத் தெரிவித்த அவர், தம்மால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை, ஊடகங்கள் வெளிக்கொணர்வதில்லை என்றும் விமர்சித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .