2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மலையக அபிவிருத்தியை பாதிக்கும்’

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்ரீ.சண்முகநாதன்   
“அண்மைக் காலமாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் தெரிவித்து வரும் இனவாதக் கருத்துகள், மலையக அபிவிருத்தியை வெகுவாகப் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

“தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் மரணம், விவசாயிகள் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை, நீட் தேர்வு, மீனவர் கைது போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது, அவற்றையெல்லாம் தீர்த்துவைக்காமல், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கைங்கரியத்தில், தமிழகத் தலைவர்கள் ஈடுபடாமல் இருந்தால் நல்லது. அதுவே, எமது மக்களுக்கு செய்கின்ற நன்மையாகவும் அமையும். இதுவரை காலமும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு, மலையகத்தின் மீது திடீரென பற்றும் பாசமும் பொங்கியெழுவது ஆச்சரியமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,  

“நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த மூன்று ஆண்டுகளாக கண்களை மூடிக்கொண்டு இருந்த மலையக அரசியல்வாதிகள், இப்போது அறிக்கை விடுவதும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி ஆடுகின்ற நாடகம் என்பதை, மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

“நல்லாட்சி அரசாங்கத்துக்கு மலையக மக்கள் வாக்களித்த காரணத்தால்தான் இன்று மலையகத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மக்களுக்கு, இப்போதுதான் தலா ஏழு பேர்ச் காணியுடன் தனி வீடுகள் கிடைத்து வருகின்றன.

அத்தோடு, காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு அவர்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக மாறி வருகின்றார்கள். இதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றார்கள்.  

 “மேலும், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தி அடுத்தடுத்து கொடுத்துவந்த அழுத்தம் காரணமாகவே, நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதேச சபைகள் அதிகரித்துள்ளது போல, பிரதேச செயலகங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் எமது இளைஞர், யுவதிகள் பிரதேச செயலகங்களில் பணிபுரியக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.  

“மேலும், பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் பெருமளவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்துள்ளதோடு, பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பும் கிட்டியுள்ளது. இதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .