2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

250 ஏக்கர் காணி அடுத்த வாரம் விடுவிப்பு

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக மேலும் 250 ஏக்கர் காணி அடுத்தவாரம் அளவில் விடுவிக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

'பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள காணிகள் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு, அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என்றும், அதுவரை வனப்பிரதேசம் தவிர்ந்த ஏனைய அரச காணிகளை இனங்கண்டு அதில் மீள்குடியேற்றம் செய்யுமாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

'வடக்கு, கிழக்கில் தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அவற்றை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அதன் அறிக்கைக்கு அமைய தேவையற்ற காணிகள் இருக்குமாயின் அதனை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுப்பார்.

ஏற்கனவே சம்பூர் மற்றும் வலிகாமம் பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 250 ஏக்கர் காணி அடுத்தவாரம் அளவில் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படும்.

இதுவரையில் மீள்குடியேற்றப்படாதவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக சொந்தக் கிராமங்களில் இவ்வருடத்துக்குள் குடியேற்றுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதேச செயலகங்கள் ஊடாக நாங்கள் தகவல்களைப் பெற்றுள்ளோம். அதற்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் நேரடியாக அமைச்சுக்கு வந்து தம்மைப் பதிவுசெய்ய முடியும். இடம்பெயர்ந்தவர்களின் குடும்பங்கள் 3,4 குடும்பங்களாக விருத்தியடைந்திருக்கலாம். அவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X