2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுற்றாடல் உதவிப் படையணியை அமைக்குமாறு பணிப்பு

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த நிலைமைகளுடன் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை முகாமைத்துவம் செய்து மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமான ஒரு சூழலை அமைப்பதற்கான விசேட சுற்றாடல் உதவிப் படையணியொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

அனர்த்த நிலைமைகளின் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (23) முற்பகல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார். மத்திய சுற்றாடல் அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, முப்படையினர், 

பொலிஸார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகல அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கியதாக இந்தப் படையணி அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இந்த செயற்பாடுகளின்போது மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஆகியன சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வெள்ள நிலைமைகள் குறைந்ததன் பின்னர் மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் டெங்கு போன்ற நோய் நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சூழல் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் லால் மேர்வின் தர்மசிறி, பணிப்பாளர் நாயகம் எச்.கே. முத்துகுடாரச்சி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X