2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'முன்மொழிவுகளை அமுலாக்க தொடர் செயற்றிட்டம் தேவை'

Thipaan   / 2017 மே 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலை, பண்பாடு மற்றும் திரைப்படத்துறையின் எதிர்காலம் மற்றும் அவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்படும் அறிஞர்களின் முன்மொழிவுகளை அமுல்படுத்தலுக்காக தொடர்ச்சியான செயற்திட்டம் தேவையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஊடக, கலாசார மற்றும் கல்வி அமைச்சுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவின் மூலம் அந்த செயற்றிட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதிக்கும் கல்வியியலாளர்கள், கலைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்படி ஆலோசனைகளை வழங்கினார்.

காப்புரிமைப்பங்கு செலுத்துதல் தொடர்பான பிரச்சினை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த விடய அறிவுடைய நடுநிலையான அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கான அரச கொள்கையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஜோன் டீ சில்வா கலையரங்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், கலாசார அமைச்சர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களின் பங்குபற்றுதலுடனான கலந்துரையாடலை ஏற்படுத்தி தொடர் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

உள்நாட்டு திரைப்படத்துறை மற்றும் நாடகத்துறையின் உயர்வுக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சி நாடகங்களை மட்டுப்படுத்த எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், அத்துறைகளை சீராக்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலைஞர்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை தெரிவித்தனர்.

நல்லிணக்க செயற்றிட்டம் வெற்றிபெறுவதற்காக கலைகள் ஊடாக வழங்கக்கூடிய பங்களிப்பு மிகவும் உயர்ந்ததென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய படைப்புக்கள் உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைப் பிள்ளைகளின் கலை இரசனையை மேம்படுத்துவதனூடாக அறிவும் விழுமியங்களும் நிறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்களான எஸ்.பீ.நாவின்ன, கயந்த கருணாதிலக்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் அமைச்சு செயலாளர்கள், அரச அலுவலர்கள் மற்றும் கலைஞர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .