2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக சில பெரும்பான்மை பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலையினை ஏற்படுத்தலாம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் அனுப்பியுள்ள அவசர கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக சில பெரும்பான்மை பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் தொடர்ச்சியாக செய்து வரும் அநாகரீகமான செயற்பாடுகள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் விசனத்துக்குள்ளாகியுள்ளது.

இது இந்த நாட்டில் இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலையினை ஏற்படுத்தலாம். அத்துடன் இஸ்லாமியர்கள் ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு துணை போனவர்கள் அல்ல.

கடந்த சில மாதங்களாக இலங்கை முஸ்லிம்கள மீதும் அவர்களது கலாசார மற்றும் விழுமியங்கள் மீதும் சோடிக்கப்பட்ட பல்வேறு பொய்யான கதைகளை புனைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் இன ஒற்றுமையினையும் விரும்பும் சகோதர பெரும்பான்மை மக்களையும் முஸ்லிம்கள் மீதும் பிழையான பார்வையினை கொள்ளும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கு காலம் சில அமைப்புக்கள் உருவாகி நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றை முடக்கும் வகையிலும் சர்வதேச அமைப்புக்களின் நிதிகளுக்காகவும் செயற்படும் சதி திட்டத்தின் ஒரு வடிவமாகவே இதனை பார்க்கின்றோம்.

மதங்கள் என்பன மக்களை நேர்வழியின் பால் இட்டுச் செல்லவே தோற்றம் பெற்றன என்பதற்கமைவாக அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்கள் தமது அல் – குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பனவற்றின் அடிப்படையில் வாழ்வதும் அவர்களது உரிமையாகும்.

இலங்கை என்பது ஜனநாயக விழுமியங்களை கொண்ட ஒரு நாடு என்பதால் தாம் விரும்பகின்ற மதத்தை பின்பற்றும் சுதந்திரம்  வழங்கப்பட்டுள்ளது.இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரையில் தாம் வாழும் இலங்கை தாய் நாட்டை முழுமையாக நேசிப்பவர்கள்.

ஒரு போதும் நாட்டில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், இன படுகொலைகள். என்பனவற்றை விரும்பியதாக வரலாறு இல்லை. இலங்கையில் வாழ்ந்த மூத்த அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் அல்-குர்ஆனை கற்றரிந்த உலமாக்கல் போன்றவர்கள் தொடக்கம் இன்று வரை வாழும் இஸ்லாமியர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவே இருந்து வருகின்றனர்.

துரதிஷ்டவசம் சில பெரும்பான்மை அமைப்புக்கள் தமது விளம்பரங்களுக்காக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அண்மை காலமாக ஹலால் சான்றிதழ் தொடர்பில் சர்ச்சையினை ஏற்படுத்தி வருகின்றன. முஸ்லிம்கள் தமது மார்க்க அனுஷ்டானங்களுக்கமைவாக உணவு விடயங்களில் ஹலால் (ஏற்றுக் கொள்ளப்பட்ட) பேணுவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

அந்த வகையில் இதனை சகல முஸ்லிம்களும் பின்ப்பற வேண்டும் என்பதில் அது சட்டங்களை வகுத்துள்ளது. அதனை ஏனைய சகோதர சமூகங்கள் எற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு பாதகமான எந்தவொரு நிலையும் எற்பட போவதில்லை.

எனினும் அவர்கள் அதனை விரும்பவிட்டால் அது குறித்து அவர்கள் கவலைப்பட தேவையுமில்லை. அதனைவிடுத்து இலங்கையில் வாழும் முஸ்லிம்களை துன்புறுத்தியும் மக்களது மத தளங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பனவற்றின் மீது அநாகரிமான முறையில் மேற்கொள்ளப்படும தாக்குதல்கள், முஸ்லிம்களின் பிரதான அமைப்பான அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை மீது மேற்கொள்ளப்படும் விசமத்தனமாக பிரசாரங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது .

இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம்களின் கௌரவத்திற்கும் மத  செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எமது கட்சியின் அதியுயர் பீடம் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

அந்த தீர்மானத்தை தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் இந்த விசமத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .