2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வணக்க அரசியலை நாங்கள் செய்வதில்லை: மனோ

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கள் இனவுணர்வு சிங்கள சகோதரர்களுக்கு எதிரானது அல்ல.  நாங்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்து கூறி அவர்களுடன் இணக்க அரசியல்தான் செய்கிறோம். அவர்களின் போராட்டங்களிலும் நாம் கலந்து கொள்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் கொள்ள வேண்டாம். அதன் அடையாளமாகத்தான் இங்கே நண்பர் விக்கிரமபாகு அமர்ந்துள்ளார். ஆனால் நாங்கள் வணக்க அரசியல் செய்வது இல்லை. அது அடுத்தவன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி செய்யும் சரணாகதி அரசியலாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தாங்கள் செய்யும் இந்த தன்மானமற்ற வணக்க அரசியலுக்கு, இணக்க அரசியல் என்று சிலர் பெயர் சூட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய நபர்கள் தொடர்பில் மேல்மாகாண தமிழர்கள் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின்  கம்பஹா மாவட்ட செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கம்பஹா மாவட்ட தமிழர் ஒன்றுகூடல் கூட்ட தொடரின் முதலாம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் ஜெரோம் விக்னேஸ்வரன் தலைமையில் வத்தளை த-செப் விருந்தகத்தில் நடைபெற்றது. இதில் நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கிலும், மலையகத்திலும் நமது தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்கும், தமிழ் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து எமது இனத்தின் ஜனநாயக பலத்தை உறுதி செய்துள்ளார்கள். வத்தளை, நீர்கொழும்பு, ஜா-எல, களனி ஆகிய பகுதிகள் உட்பட கம்பஹா மாவட்டத்தில் வாழும் தமிழர்களும் அத்தகைய இன உறுதிப்பாட்டை இங்கு மேல்மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும். நமது ஜனநாயக மக்கள் முன்னணியின் மூலம் அதற்கான நல்ல காலம் இப்போது  பிறந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு, களுத்தறை, கம்பஹா என்ற மூன்று மேல்மாகாண மாவட்டங்களிலும் போட்டியிடும். இந்த முடிவை எமது அரசியல்குழு செப்டம்பர்  28 ஆம் திகதியே எடுத்துவிட்டது.

இந்த பின்னணியில் கம்பஹா மாவட்டத்தில் எமது இந்த முதலாம் கலந்துரையாடலை இங்கு ஏற்பாடு செய்தோம் ஆனால், இங்கு நீங்கள் அணித்திரண்டு பெருந்தொகையில் கலந்துகொண்டு  என்னை பரவசப்படுத்தி, ஒரு கலந்துரையாடலை ஒரு பொது கூட்டமாக மாற்றி விட்டீர்கள்.

எடுத்து காட்டிவிட்டீர்கள்

இது எங்கள் மக்கள் மத்தியில் இன்று தோன்றியுள்ள எழுச்சியை எடுத்து காட்டுகின்றது. தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் நாம் வாழும் மாவட்டங்களில் எங்களை நாம் ஜனநாயக அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக ஒழுங்கு படுத்தி கொள்ள வேண்டுமென்ற எங்கள் கட்சியின் கொள்கையை கம்பஹா மாவட்ட வத்தளை தமிழர்கள் பெருவாரியாக அங்கீகரித்துள்ளதை  நீங்கள் இன்று எனக்கு எடுத்து காட்டிவிட்டீர்கள்.

போதும் இனி போதும். கம்பஹா  மாவட்டத்தில் கடந்த காலங்களில், நமது தமிழ் வாக்காளர்கள், பெரும்பான்மை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்து, அளித்து, அழிந்து போன வரலாற்றை இனி நாம் மாற்றுவோம். எங்கள் வாக்குகள் மூலமாக நாம் இனி எமது இனத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து காட்டுவோம்.

பிரதிநிதித்துவத்தை சீரழிக்க வேண்டாம்

நம்மிடையே இன்னமும் ஒற்றுமை வேண்டும். சிறு, சிறு முரண்பாடுகளை தூர எறியுங்கள்.  நமது ஒற்றுமையை குலைத்து, தமிழின உணர்வை சிதைக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தங்கள் சொந்த தேவைகளுக்காக நமது மக்களின் வாக்குகளை உடைத்து, பிரித்து, கம்பஹா மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை சீரழிக்க வேண்டாம் என இத்தகைய நபர்களிடம் நான் இன்று வெகு பவ்வியமாக கேட்டு கொள்கின்றேன்.

இந்த மாவட்டம் சுமார் 35,000 தமிழ் பெயர்கள் கொண்ட வாக்காளர்களை கொண்டது. இதில் சிலர் இன்று தமிழராகவே இல்லை. இதில் வாக்களிப்பது 50 விகிதம். அதில் பழுதாகும் வாக்குகளை கழித்து பார்த்தால், எஞ்சுவது சுமார் 15,000 வாக்குகளாகும். இந்த வாக்குதொகையை பல கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தால் எமக்கு எஞ்சுவது கோழி முட்டைதான்.

எங்கள் வாக்குகளை வாங்குபவர்கள் எங்களுக்கு பிரதிநிதித்துவம்  பெற்று கொடுப்பது இல்லை. அதாவது, எங்கள் வாக்கு வேண்டும். ஆனால் எங்களுக்கு சீட்டு இல்லை. கடந்த 2009 மேல்மாகாணசபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சி 27 ஆசனங்களை பெற்றது. இந்த 27 ஆவது கடைசி வேட்பாளர்  பெற்ற விருப்பு வாக்கு 26,186 ஆகும். ஐ.தே.க 10 ஆசனங்களை  பெற்றது. இந்த 10 ஆவது கடைசி வேட்பாளர் பெற்ற விருப்பு வாக்குகள் 18,472 ஆகும். இந்த முறை ஐ.தே.கவின் ஆசனங்கள் சிலவற்றை சரத் பொன்சேகாவின் கட்சி பெற்றால், ஐ.தே.கவில் ஆசனம் குறைந்து அங்கு வெற்றி பெற 25,000 விருப்பு வாக்குகளை பெற வேண்டிய நிலைமை ஏற்படும். 

ஒருபோதும் வெற்றி பெற முடியாது

ஆகவே,  கம்பஹா மாவட்டத்தில்  தமிழர் வாக்குகளை மாத்திரம் கொண்டு ஒரு தமிழ் வேட்பாளர் பெரும்பான்மை கட்சிகளில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இப்படி இருந்தும் பெரும்பான்மை கட்சிகள் தமிழ் வேட்பாளர்களை நிறுத்துவதன் காரணம், அங்கு போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் வாக்காளர்களின் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை பெறுவதற்காக என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  அதாவது தமிழர் வாக்குகளை வாங்கி தங்கள் விருப்பு வாக்குகளை அதிகரித்துக்கொள்ள சிங்கள வேட்பாளர்கள் தமிழ் வேட்பாளர்களை பயன்படுத்துகிறார்கள்.

பூனைக்கு விளையாட்டு. சுண்டெலிக்கு மரணம்  என்ற கதை உங்களுக்கு தெரியும். அந்த கதைதான் இது. அவர்களுக்கு விருப்பு வாக்கு விளையாட்டு. இந்த விளையாட்டில் எங்கள்  தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒழிந்து இயற்கை மரணம் அடையும். அதன்பிறகு கம்பஹா மாவட்ட தமிழர்கள் கருமாதி நடத்தி ஒப்பாரி வைக்க வேண்டியதுதான். இந்த மோசடி வேலை இனிமேல் கம்பாஹவில் நடக்க நான் ஒருபோதும் இடந்தரமாட்டேன்.

கொழும்பில் ஒரு லட்சம் தமிழ் வாக்குகள் இருப்பதால் அங்கு நாம் தனித்தும் போட்டியிடலாம். பெரும்பான்மை கட்சியுடன் கூட்டு சேர்ந்தும் போட்டியிடலாம். ஆனால் இங்கு கம்பஹாவில் தனித்து போட்டியிட்டால் மாத்திரமே, மிகுதி வாக்கு ஆசனம் என்ற அடிப்படையில் சிறு தொகையை பெற்று நாம் வெற்றி  பெரும் வாய்ப்பு இருக்கிறது. இதையே நாங்கள் இரத்தினபுரியிலும், கேகாலையிலும் செய்து காட்டினோம். 

தமிழ் மக்களை ஏமாற்றுவது இல்லை

எங்களுக்கு பெரும்பான்மை இன வாக்குகள் கிடைப்பதில்லை.  அது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் முடியாத வேலைகளை செய்து நேரத்தை வீணடித்து, தமிழ் மக்களை ஏமாற்றுவது இல்லை. பெரும்பான்மை கட்சியில் போட்டியிடும் தமிழர்கள் மாற்று இன வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம்.  அப்படி எந்த ஒரு கம்பஹா மாவட்ட தமிழ் வேட்பாளருக்கும் முடியுமானால் அவர்கள் சிங்கள வாக்குகளை பெற்று வெற்றி பெற்று வரட்டும். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

ஆனால் தமிழ் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என்று அவர்களை கேட்டுகொள்கின்றேன். அப்படி வாக்குகளை சிதறடித்தால், கம்பஹா மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த சாபம் அவர்களைதான் சாரும் என்பதை இப்போதே எழுதி வைத்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .