2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்'

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன்  இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இச்சம்பவம் குறித்து பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகவியலாளர் செல்வதீபன் யாழ்ப்பாணம் புறாப்பொறுக்கியில் வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு  விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அச்சுறுத்தல் விடுக்கப்படுவதும் வழமையான சம்பவங்களாகிவிட்ட நிலையே இன்று காணப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களானது ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமைவதால் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பான அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"புதுவருட தினமான திங்கட்கிழமை இரவு எட்டு மணியளவில் ஊடகவியலாளரான செல்வதீபன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். ஹெட் லைட் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்வதீபனின் மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்த சிலரே இவரை வழிமறித்துத் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் இரும்புக்கம்பிகளால் தாக்கப்பட்ட போதிலும், தலைக்கவசம் அணிந்திருந்தமையால் தலையில் அதிஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இருந்த போதிலும் தோளிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து தப்பியோடி பற்றைகளுக்குள் மறைந்திருந்து தப்பித்துக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அச்சுறுத்தப்படுவதும் ஒரு வழமையான நிகழ்வாகிவிட்டது.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புள்ளவர்களை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கு அதற்குப் பொறுப்பானவர்கள் தவறிவிடுகின்றார்கள். இதனால் அச்சத்துடன் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியவர்களாகவே ஊடகவியலாளர்கள் உள்ளனர்.

எனவே, இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கும் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை முன்னெடுக்கவும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்."

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .