2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘காணி விடுவிப்புப் போராட்டத்தில் அரசியல் தலையீடு கிடையாது’

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  
காணி விடுவிப்புக் கோரி, தாம் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை, கேப்பாப்புலவு மக்கள் நிராகரித்துள்ளனர்.  

கேப்பாப்புலவு மக்களின், தொடர்ச்சியான நில மீட்புப் போராட்டம், 146 ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றது. 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.  

தமது போராட்டத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்ததாகவும், எனினும் அவ்வாறானதோர் அரசியல் தலையீடுகள் தமது போராட்டத்தில் இல்லை எனவும், மக்கள் குறிப்பிடுகின்றனர்.  

காணி விடுவிப்புக்கு நிதிகோரிய இராணுவம், நிதியைப் பெற்றுத் தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டு, காட்டுப் பகுதிகளை மீளக் கையளித்துள்ளதாக, அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

2008ஆம் ஆண்டு, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 2012ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து மீள்குடியேற்றம் செய்யப்படப்போவதாகத் தெரிவித்து, வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.  

இந்த நிலையில் மக்கள் சொந்த நிலத்துக்குச் செல்லவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில், மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.  

எனினும் கடந்த எட்டு வருடங்களாக சொந்த நிலத்துக்குச் செல்வதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்ட போதிலும், வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை தடுத்து நிறுத்தப்பட்டன.  

இந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் ஐந்தாவது மாதமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .