2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'சாவகச்சேரி சம்பவத்தில் தமிழர்களுக்கு எதிராக சதி'

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'சாவகச்சேரி, மறவன்புலம் பகுதியில் வீடொன்றில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன், அரசாங்கத்தில் இருந்துகொண்டு சதி செய்துகொண்டிருப்பவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

'மேற்படி வெடிபொருட்கள், சிங்கள பத்திரிகையொன்றிலேயே சுற்றப்பட்டுள்ளன. மீண்டும் புலிகள் உருவாகின்றார்கள் என தமிழ் மக்கள் மீது பழியைப் போட்டு தமிழ் மக்களை துன்புறுத்துகின்ற நாடாகமாக இதனைப் பார்க்க வேண்டும்' என்றும் அவர்; கூறினார்.  

சாவகச்சேரி மறவன்புலம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 கிளைமோர் குண்டுகள், 2 கிளைமோர் பற்றரிகள், 12 கிலோகிராம் நிறையுடைய சி4 ரக வெடிமருந்துகள், 1 தற்கொலை அங்கி, 4 சிம் கார்ட்கள் என்பன புதன்கிழமை (30) மீட்கப்பட்டிருந்ததுடன், அதனை வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தில் சந்தேகநபர் ஒருவர் அக்கராயன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, “ஒரு இடத்தில் காசு கொடுத்து காணி வாங்கி அங்கு வசிப்பது வேறு, அரசாங்கத்தால் முறையற்ற விதத்தில் குடியேற்றம் செய்வது வேறு. இதனை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உணரவேண்டும்“ எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

“தந்தை செல்வா – பண்டா ஒப்பந்தத்தின் போது, தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளமாட்டோம் எனக் கூறியபோதும், தொடர்ந்தும் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்த சிங்களக் குடியேற்றங்களைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். தமிழர்களின் காணிகளை அடாவடித்தனமாக அபகரித்து, அதில் சிங்களவர்களை குடியேற்றுவதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.

எங்கள் தாயகத்தில் எங்களை சிறுபான்மையினராக்கும் செயற்பாடு தொடர்ந்து நடைபெறுகின்றது.
நயினாதீவில் 75 அடி புத்தர் சிலை நிர்மாணிப்பதில் ஆளுநர் இவ்வளவு அக்கறை காட்டுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை?. நயினாதீவு என்ற பெயரை மூன்று மொழிகளிலும் நாகதீப என்று மாற்றினார்கள். இதுவா நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகின்ற செயற்பாடு?” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X