2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’தடையின்றி பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன’

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லையெனத் தெரிவித்த யாழ்ப்பாண வர்தக சங்கம், போதுமான அளவு பொருள்கள் கையிருப்பில் உள்ளதால், தங்கு தடையின்றி பொருள்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும், அச்சங்கம் கூறியுள்ளது.

நேற்று (14) யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சங்கம் இவ்வாறு தெரிவித்தது.

இது குறித்து, அச்சங்கம் மேலும் கூறுகையில்,

“வெளிநாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வோர் மற்றும் இலங்கையில் பொருள்களை உற்பத்தி செய்வோர் தொடர்ந்தும் பொருள்களை விநியோகம் செய்யுமிடத்தில், பொதுமக்களுக்கான பொருள்கள் விநியோகத்தை யாழ் வர்த்தகர்கள் சிறந்த முறையில் மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்தது.

“தற்போதைய நிலையில், கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் குடாநாட்டுக்கு பொருள்களை கொண்டு வருவதும் குடாநாட்டிலிருந்து பொருள்களை கொண்டு செல்வதும் எந்த தங்குதடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

“கடந்த சில நாள்களாக பொதுமக்கள் வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான முறையில் பொருள்களை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் வர்த்தகர்கள் இரவிலும் தங்கள் வர்த்தக நிலையங்களை நீண்டநேரம் திறந்து அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள்” எனவும் சங்கம் தெரிவித்தது.

பொதுமக்கள் திடீரென அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதனால் வர்த்தக நிலையங்களில் ஏற்கனவே இருக்கும் கையிருப்புக்களை விட மேலதிகமான பொருள்கள் தேவைப்படுகின்றது. இதன் மூலம் வர்த்தகர்கள் சில நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றார்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாள்களில் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆகையால் பொதுமக்கள் அளவுக்கதிகமான பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறும், சங்கம் வலியுறுத்தியது.

பொதுமக்கள், பொருள்களை கொள்முதல் செய்யும்போது நீண்டகாலம் பழுதடையாமல் வைத்துப் பாவிக்கக் கூடியதான உலர் உணவுகளை கொள்முதல் செய்வது சிறந்தது.

மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்து வகைகள், அரிசி வகைகள் மற்றும் ஏனைய பொருட்கள் விநியோகஸ்தர்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருள்களை போதிய கையிருப்பை பேண வேண்டுமெனவும், பொதுமக்களுக்கான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடின்றி விநியோகிக்க தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X