2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

யுத்த காலத்தின் போது, தொண்டர்களாகவும் தொண்டராசிரியர்களாகவும் பணியாற்றிவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினேல்ட் குரே தெரிவித்தார்.

யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,  அரசாங்க வேலை செய்வோருக்கு வழங்கப்படும் ஊதியம் துன்பப்பட்ட மக்களின் வரிப்பணத்திலேயே வழங்கப்படுகின்றதெனவும் அது எனது பணமோ செயலாளர்களின் பணமோ அல்லது அரசியல்வாதிகளின் பணமோ கிடையாதெனவும் தெரிவித்தார்.

மக்களின் பணத்தில் சம்பளம் வேண்டும் எமக்கு ஒரு கடமை இருக்கின்றதெனத் தெரிவித்த அவர், அதுதான் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குமெனவும் கூறினார்.

அரசாங்க சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்காக மக்களின் அபிவிருத்திக்காக நேர்மையான உண்மையான சேவையை பாகுபாடு இன்றி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், வடமாகாண இளைஞர், யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானதெனவும் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் அரசாங்க வேலைகளில் அமர்த்துவதற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வது மிகவும் கடினமானதெனத் தெரிவித்த அவர், அதற்கு காரணம், யுத்தம் நடைபெற்ற காலத்தில் படித்த பல இளைஞர், யுவதிகள் அரசாங்க வேலைகளில் உள்வாங்கப்படும்போது தமது சான்றிதழ்களை தகுதிகளை உறுதிப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனரெனவும் குறிப்பிட்டார்.

“யுத்தம் காரணமாக, அவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.யுத்த காலத்திலே பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் பலர் ஊதியம் இல்லாது தொண்டர்களாக கடமை செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கு கட்டாயம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

“அவ்வாறு சேவை செய்தவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் முடிவு செய்து இரண்டு முறை நியமனங்களை வழங்கியது. ஆனால் மீண்டும் பலர் வருகின்றார்கள்

“நாங்களும் தொண்டர் ஆசிரியர்கள் என்று. எங்கிருந்து வருகின்றார்கள் எப்படி வருகின்றார்கள் என்பது யாருக்கும் புரியாத விடயமாக இருக்கின்றது” என்றார்.

சேவை செய்தவர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியபோதும், உண்மையாக பிரச்சினையான காலங்களில் சேவை செய்தவர்களுக்கு நியமனம் வழங்காது இங்கே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக வருபவர்கள் கூறுகின்றார்களெனத் தெரிவித்த அவர், அதனால் இந்தப் பிரச்சினை திரும்ப திரும்ப வருகின்றதெனவும் தவறு எங்கே நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களெனவும் கூறினார்.

வடமாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதவற்கு அதிகாரிகள் முழு முயற்சி எடுத்துவருகின்றார்கள். அதற்கான அனுமதியினை வழங்குவது எனது கடமை அதனை முழுமையாக நான் செய்ய தயாராக இருக்கின்றேன் என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .