2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும்'

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்த சூழலை மாற்றி, இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள், என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ளது” என வடமாகாண முதலமைச்சரும தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். நூலக மண்டபத்தில், திங்கட்கிழமை (19)  இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் வைத்து அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள், காலங் காலமாக வாழ்ந்து வரும் இடங்களை, அவ்வாறே தொடர்ந்தும் அடையாளப்படுத்தும் விதத்தில், சட்ட ரீதியான அங்கிகாரத்துடன், நம்மை நாமே ஆளும் உரிமையுடன் நாம் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மையமாக வைத்தே, நாங்கள் எமது அரசியலமைப்பு ரீதியான முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் கையளித்தோம்.

முதன் முதலாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அடிமட்ட அபிலாஷைகளை அவையறிய நாம் அறிவித்தது இந்தத் தருணத்தில்த்தான். அந்தக் கணம் தொடக்கம், அடிமட்டத் தமிழ் மக்களின் கரிசனைகளை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

போரின் பின்னர், தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் குரல்கள், சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரித்துக்களைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன். ஆனால், மக்களின் மனோநிலை என்ன, அவற்றைப் பிரதிபலிப்பது எமது கடமையல்லவா என்ற எண்ணத்தை அவர்கள் பலர் அடியோடு மறந்திருந்ததாகவே நான் உணர்ந்தேன்.

ஆங்கிலத்தில் அல்லது சிங்களத்தில் பெரும்பான்மையின மக்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய எமது மக்களின் அவலங்களை, அபிலாஷைகளை, அங்கலாய்ப்புக்களைப் நாடாளுமன்றத்தில் எம் பிரதிநிதிகள் தமிழில் பேசி விட்டு வர அவர்கள் கூறியதை எவருமே கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை.
தாம் பேசியதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இடம் பெறச் செய்தால் அதுவே போதும், அரசில் தீர்வுகள் எது கிடைத்தாலும் அதனை ஏற்கலாம், எங்களுக்குத் திருப்பிக் கேட்கும் உரித்து இல்லை என்ற எண்ணத்திலேயே தமிழ் மக்கள் பேரவை ஜனனமாகும் வரையில், எமது தலைமைத்துவங்கள் இருந்து வந்ததாகத் தெரிகின்றது.

பேசாமடந்தைகளாக இருந்த காலத்தை மாற்றி தமிழ் மக்களின் அவலங்களை, பொங்கியெழுந்து ஆனால், பொறுமையாக எடுத்துரைத்தமையால் எமது மக்களின் தன்னம்பிக்கையை தளிர்த்தெழச் செய்துள்ளீர்கள். குட்டக் குட்டக் குனியும் மக்கள் அல்ல நாங்கள். குடியுரிமை கேட்டால் குட்டவா பார்க்கின்றீர்கள் என்று குட்டியவனையே குறைகூறும் அளவிற்கு எம் மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டியவர்களும் நீங்கள் தான். தமிழ் மக்கள் பேரவை அதன் பொருட்டு பெருமைப்படலாம்.

வடக்கு, கிழக்கில் எத்தனை சிங்களவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அல்ல முக்கியம். வடக்கு கிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் இடங்கள் என்பதையே நாம் யாவருக்கும் உணர்த்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சிங்களவர்களிடையே இருக்கும் தமிழர்கள் சிங்களம் பேசுவதும் தமிழ் பேசும் மக்களிடையே வாழும் சிங்களவர்கள் தமிழ் பேசுவதும் நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயந்தான். ஆனால் அடிப்படைகளில் நாங்கள் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும்.

அதாவது, தமிழ்ப் பேசும் மக்களைச் சிங்களம் பேசும் மக்களாக வேண்டுமென்றே மாற்ற எத்தனிப்பதும் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பெயர்மாற்றம் செய்ய முற்படுவதும் இன அழிப்புக்குச் சமமானது என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்த வேண்டும்.

அரசாங்கம், சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் விட்டு விடவே கரவாக இயங்கி வருகின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. எமது அரசாங்கம் சர்வதேசத்திடம் சம்மதம் தெரிவித்துக் கொண்ட சட்ட ஆவணங்கள் மூன்றை நாங்கள் எமக்குச் சாதகமாகப் பாவிக்குங் காலம் எழுந்துள்ளது.

இணக்க அடிப்படையில் ஜெனிவாவில் கொண்டு வந்து கைச்சாத்திட்ட பிரேரணையின் பிரிவுகளின் படி இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து விட்டதா? இல்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யவில்லை? எப்பொழுது செய்யப் போகின்றீர்கள் என்று சட்டரீதியாகக் கேட்டு இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை அதற்குணர்த்தி அது காலங் கடத்திச் செல்வதைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கடமை எமக்குண்டு.

வடமாகாணத்தில் 150,000 இராணுவ வீரர்களை நிலைத்து நிற்க வைத்துவிட்டு சமாதானத்துடன் கூடிய, எல்லோரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்க முடியாது. இராணுவத்தினரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் தலையாய கடப்பாடுகளில் ஒன்றாக அமைகின்றது.

அடுத்து வரும் காலங்களில் அரசாங்கத்துக்கு சட்ட ரீதியான நெருக்குதல்களை ஏற்படுத்த தமிழ் மக்கள் பேரவை ஆயத்தமாக வேண்டும். அதுவும் வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அவ்வாறான நெருக்குதல்களை ஏற்படுத்துவது நல்லது என்று எனக்குப்படுகின்றது.அந்த வகையில் விரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் 'எழுக தமிழ்' கூட்டம் சரியான திசையிலேயே அமைந்திருக்கின்றது.

எமக்கேற்ற சாதகமான அரசியல் தீர்வொன்று எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமாக எனக்குப் படவில்லை. எமது நிலங்கள் பறிபோவன. எமது மொழி புறக்கணிக்கப்படும். தெற்கிலிருந்து வந்து வடக்குக் கிழக்கை ஆக்கிரமிக்கும் செயற்பாடு விரைவாக நடைபெறும். இதனால் தான் நாங்கள் வலுவான, நிலையான, நீதியான, பொறுப்பான அரசியல் தீர்வொன்றை எதிர் பார்த்திருக்கின்றோம்” என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .