2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாதியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு மேல் நீதிமன்றம் தடையுத்தரவு

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு தாதியர்கள்; இன்று வெள்ளிக்கிழமை (08) மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததோடு இது தொடர்பில் ஆட்சேபனை கோரிக்கைகளை முன்வைக்கவும் தாதியர் சங்கத்துக்கு கால அவகாசமும் வழங்கியுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சைப்பகுதிக்கு பொறுப்பான தாதி விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள யாழ். அரச தாதி  உத்தியோத்தர் சங்கம் இன்று (08) காலை 7 மணி தொடக்கம் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் யாழ். மேல் நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இரண்டு வார காலத்துக்கு செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்தத் தடையுத்தரவு தொடர்பில் தாதியர் சங்கத்தினர் தமது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கும் நீதிமன்றம் சந்தர்ப்பம் அளித்து இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சிவநாதன் ஜமுனானந்தாவை மனுதாரராகக் கொண்டு, சட்டத்தரணி திருக்குமரன் இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

போராட்டத்தை நிறுத்துவதற்கு இடைக்கால உத்தரவு கோரிய மனுவில் யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் முதலாம், இரண்டாம் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

முதலாம், இரண்டாம் எதிர் மனுதாரர்களாகிய தாதியர் சங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட தாதியர் சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களுக்கும், சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கும், அதேநேரத்தில், வைத்தியசாலைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்டு தாதியர் சங்க வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், தாதியர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி திருக்குமரன் தனது மனுவில் நீதிமன்றத்திடம்  விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன், எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் 14 நாட்கள் அமுலில் இருக்கும் வகையில் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடையுத்தரவு கட்டளை பிறப்பித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது இடைக்கால தடையுத்தரவு கட்டளையில் தெரிவித்துள்ளதாவது:
'சர்வதேச சிவில் அரசியல் மாநாட்டு மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையிலும், உறுதிகேள் எழுத்தாணை பிரிவின் அடிப்படையிலும் தாதியர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தைத் தடைசெய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யப்பட்டது.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் உயிர் வாழ்வு சுதந்திரம் பிரகடனப்படுத்தப்படாத போதிலும், உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முன்னைய தீர்ப்புக்களின் மூலம் உயிர் வாழும் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சிவில் அரசியல் மனித உரிமைகள் இலங்கை சட்டத்தின் பிரகாரம் சுகாதார உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரண்டு சட்டப்பிரிவுகளையும் கவனத்திற்கொண்டு, அவற்றின் அடிப்படையில், யாழ். அரச தாதியர் சங்கம் யாழ். போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தும்போது, நோயாளர்களுக்கும் வெளிநோயாளர் பிரிவுக்கும் அங்கு எற்கெனவே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் எற்படக் கூடிய சூழ்நிலைகள் காணப்படுகின்றன. எனவே, அரச தாதியர் சங்கம் உடனடியாக அனைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தையும் நிறுத்துமாறு இந்த நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை பிறப்பிக்கின்றது.

இன்றில் இருந்து 14 நாட்கள் எதுவித வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தாதியர் சங்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட்ட தாதியர் சங்கத்துக்கு இந்த நீதிமன்றம் இடைக்காலத் தடை கட்டளை பிறப்பிக்கின்றது.

அதேநேரம் யாழ். போதனா வைத்தியசாலை அரச தாதியர் சங்கத்தின் தலைவர், செயலாளர், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை 21.07.2016 அன்று மன்றில் ஆஜராகுமாறு இந்த நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பிக்கின்றது.

21.07.2016 ஆம் திகதியன்று அரச தாதியர் சங்கத்தினர் தமது ஆட்சேபனை மனு தாக்கல் செய்வதற்கும் அரச தாதியர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குரிய நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் நீதிமன்றத்தினால் சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. என இடைக்கால தடை உத்தரவு கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு கட்டளையை யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வேலை நிறுத்தப் போராட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் நீதிமன்றத்தின் கட்டளையை வாசித்துக் காட்டி, தாதியர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு கட்டளையின் பிரதிகளை நேரடியாகக் கையளித்து, அவர்களின் கையெழுத்தைப் பெற்று நீதிமன்றத்துக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கமைவாக நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு கட்டளையை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச தாதியர் சங்கத்தினருக்கு, நீதிமன்றப் பதிவாளர் நேரடியாகச் சென்று கையளித்ததுடன், அது குறித்து நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்தத் தடையுத்தரவையடுத்து, தாதியர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .