2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாரந்தனைக்கும் ஈ.பி.டி.பி.க்கும் சம்பந்தம் இல்லை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

“நாரந்தனை கொலைக்கும் ஈபி.டி.பிக்கும் சம்பந்தம் இல்லை. குறித்த வழக்கு தொடர்பாக தற்போது மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

கட்சி அலுவலகத்தில், நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

2001ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, நாரந்தனைப் பகுதியில் தாக்குதல் நடாத்தி, இருவரைப் படுகொலை செய்தமை தொடர்பில்  குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.  

“சம்பவம் இடம்பெற்ற அன்று மதனராஜா, கட்சி அலுவலகத்தில் என்னுடன் இருந்தார். எனவே இத்தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தற்போது, அன்ரன் ஜீவராசா தவிர்ந்த மற்றைய இருவரும், வெளிநாட்டில் இருந்து கட்சியின் செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர்” என்றார்.  

இதன்போது, “சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதே” என, ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, “பிடித்தால் பிடிக்கட்டும். அவர்களைப் பிடித்து, நாட்டுக்கு கொண்டு வரட்டும்” என்றார்.  

“மேலும், இவ்வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணியூடாக அனுமதி கோரியிருந்தேன். எனினும் அனுமதி கிடைக்கவில்லை. அந்த வகையில், தற்போது குறித்த வழக்கு சம்பந்தமாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .