2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனு கையளிக்கத் தூண்டியதாகக் கூறி இளைஞருக்கு மிரட்டல்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

 

யாழ்ப்பாணம் மாவட்டப் பனை - தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியில் இருந்து, இராணுவத்தினர் வெளியேற வேண்டுமெனக் கோரி மனு கையளிக்கத் தூண்டியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் மிரட்டியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது, 

சுழிபுரம் - பாணாவெட்டி பகுதியில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் பனை - தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கும் கள்ளு தவறணைக்கு வருபவர்களால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். அதனால் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு, அப்பகுதி மக்கள் கோரி வந்தனர். 

அதன் ஒரு கட்டமாக, தமது கோரிக்கையை சங்கானை பிரதேச செயலாளரிடமும் முன்வைத்தனர். அதையடுத்து, பனை - தென்னை வள அபிவிருத்தி சங்கத்தினரையும் அப்பகுதி மக்களையும் பிரதேசச் செயலகத்துக்கு அழைத்த பிரதேசச் செயலாளர், அது தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். 

இதன்போது, தமது சங்கத்துக்குச் சொந்தமான காணியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் தான், இந்த இடத்தில், தற்காலிகமாக தவறணை உள்ளதாகவும் இராணுவத்தினர் தமது காணியினை விடுவார்கள் என்றால் தவறணை அந்த காணிக்கு மாற்றப்படுமெனவும், சங்கத்தினர் தெரிவித்தனர். 

இதையடுத்து, இராணுவத்தினர் காணியை மீள வழங்கும் வரையில், தவறணை தற்போது இயங்குமிடத்தில் இயங்கட்டுமெனத் தெரிவித்த பிரதேச செயலாளர், ஆனால், அப்பகுதி மக்களுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாதெனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமெனவும் அந்த இடத்துக்கு மீண்டும் தவறணை இடமாற்றப்பட வேண்டுமெனவும் கோரி, அப்பகுதி மக்களால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவத்தினரை வெளியேற வேண்டுமெனக் கோரி மனு கையளிப்பதற்கு இளைஞர் ஒருவரே தூண்டுதலாகச் செயற்பட்டாரெனக் கூறி, இராணுவ வீரர்கள் இருவர், வெள்ளிக்கிழமை (17) மாலை, குறித்த இளைஞரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அந்நேரம் குறித்த இளைஞர் வீட்டில் இல்லாததால், அவரரைத் தொடர்பு கொண்டு, சுழிபுரம் இராணுவ முகாமுக்கு விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து, நேற்று (18) குறித்த இளைஞர், ஊரவர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு,  இராணுவ முகாமுக்கு விசாரணைக்காகச் சென்றுள்ளார். 

இதன்போது, குறித்த இளைஞரை மாத்திரம் தனியே முகாமுக்குள் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், “இராணுவ முகாமை அகற்றுமாறு மக்களை தூண்டி விட்டது நீ தானே” என விசாரணை செய்துள்ளனர்.

அதற்கு குறித்த இளைஞர், தான் அவ்வாறு யாரையும் தூண்டி விடவில்லையெனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர், அதனை எழுத்து மூலம் பெற்றுவிட்டப் பின்னர், அவ்விளைஞரை விடுவித்தனர். 

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, அவரது ஆலோசனைக்கு அமைவாக, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X