2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருத்துவ மற்றும் சித்த பீடங்கள் நாளை ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்காக விரிவுரைகள் நாளை 20ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கபடவுள்ளதோடு, விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (18) நடைபெற்றது.

இதன்போதே, துணைவேந்தர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,

மோதல் சம்பவம் அனைவரையும் மனவருத்ததுக்கு உட்படுத்தியுள்ளது. சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்துக்குள் நிலைமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்தன.

இது மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற ஒரு மோதல் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து மூவின மாணவர்களும் பாதுகாப்புடனும் எவ்வித பிரச்சினையும் இன்றி கல்விச் செயற்பாட்டை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்ழக மாணவ ஒன்றிய தலைவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் உடனடியாக இடம்பெற்றது. இதில் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் இடம்பெறாமல் இருக்க தாம் பொறுப்பு எனவும் கல்வி செய்றபாடுகளை ஆரம்பிக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மாணவ ஒன்றியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு நிலைமை சுமுகமாக இருந்தாலும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பையும் நம்பகத் தன்மையான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது எமது கடப்பாடாகும். எனவே, அதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அந்தவகையில் நாளை புதன்கிழமை மருத்துவ பீடம் மற்றும் சித்த மருத்துவ மாணவர்கள் தமது விரிவுரைகளை ஆரம்பிப்பதற்கும் விவசாய பீட பரீட்சைகளை நடத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளளோம். ஏனைய பீடங்களின் கல்வி செயற்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பில் நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட்டு விரைவில் ஆரம்பிக்கப்படும்' என்றார்.

இந்தச் சந்திப்பில் யாழ். பல்கலைக்ழக விஞ்ஞான பீட பீடாதிபதி ஆர்.விக்னேஷ்வரன், மருத்துவபீட பீடாதிபதி ஆர்.சுவேந்திரகுமார் மற்றும் முகாமைத்துவ பீட பீடாதிபதி வேல்நம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .