2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எமக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை? ஆசிரிய உதவியாளர்கள் ஆதங்கம்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

ஆசிரிய உதவியாளர்களாகக் கடந்த வருடம் தெரிவான 462 பேருக்கும் ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கு  அனுமதி கொடுக்கப்படாமல், தேசிய கல்வியியல் கல்லூரியில் தொலைக்கல்வி வாண்மைக் கற்கை நெறியைப் பயில வேண்டும் என்ற அறிவிப்பால் குறித்த ஆசிரிய உதவியாளர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியபோதும் எவரும் இதற்கான நடவடிக்கைகள் எதையுமே எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாவது:

’’சேவை நோக்கோடு குறைந்த வேதனத்துடன் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகக் கற்பித்தல் செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டு வந்தபோதும், மிக நீண்டகால இழுத்தடிப்பின் பின் கடந்த வருடமே ஆசிரிய உதவியாளர்களாக எமக்கு நியமனம் வழங்கப்பட்டது.

எம்மோடு சமகாலத்தில் நியமனம் பெற்ற பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், எமக்கு தேசிய கல்வியியல் கல்லூரியில் தொலைக்கல்வி வாண்மைக் கற்கை நெறியைப் பயில வேண்டும் என்ற அறிவிப்பு மாத்திரமே கிடைத்துள்ளது.

தொலைக் கல்வி வாண்மைக் கற்கை நெறி என்பது எவ்வித பிரயோசனங்களுமற்ற கற்கை நெறியாக அடையாளம் காணப்பட்டு, 1994 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட ஒரு முறையாகும்.

ஆசிரிய உதவியாளர்களாகக் கடந்த வருடம் தெரிவான 462 பேருக்கும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு  அனுமதி கொடுக்காமல், தேசிய கல்வியியல் கல்லூரியில் தொலைக்கல்வி வாண்மைக் கற்கை நெறியைப் பயில வைப்பதன் மூலம் பெரும் பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தொலைக்கல்வி வாண்மைக் கற்கை நெறியைப் பயில வேண்டுமாயின் வழமை போல வார நாள்களில் பாடசாலைக்குச் செல்ல வேண்டியிருப்பதனுடன், வார இறுதி நாள்களில் கல்வியியல் கல்லூரிக்கும் செல்ல வேண்டியிருக்கும். இதனால் 3 வருடங்கள் விடுமுறை எதுவும் இல்லாமல் நாம் இடர்ப்பட வேண்டியிருக்கும்.

அத்துடன் 3 வருடங்களின் பின்னரே நாம் ஆசிரிய சேவையின் அடிப்படை நிலைக்கு உள்வாங்கப்படுவோம். அதுவரை வெறும் 3 ஆயிரம் ரூபா சம்பளத்தை மட்டுமே பெற வேண்டியிருக்கும்.

ஆனால் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஒன்றரை வருடங்களில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்யமுடியும்.அத்துடன் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடாது முழுநேரமாக - தற்போது கிடைக்கும் வேதனத்துடன் - கற்கைநெறியைத்தொடர முடியும்.

எம்மோடு சமகாலத்தில் நியமனம் பெற்ற பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் எமக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை .- என்று ஆசிரிய உதவியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .