2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பச்சிலைப்பள்ளிப் பிரதேச உயர்மட்ட மாநாட்டில் மீள்குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பளை பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் நேற்று மீள்குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட மாநாடு நடைபெற்றது.

அத்துடன், பிரதேசத்தின் நிலைமைகள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்வு நடைபெறவுள்ள பிரதேசங்களில் கண்ணி வெடி அகற்றுதல், மீள்குடியேற்றம், கிளாலி இறங்குதுறையில் மீண்டும் மீன்பிடியை ஆரம்பித்தல், பிரதேசத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான உதவித் திட்டங்கள், மீள்குடியேறிய மக்களுக்கான உதவித் திட்டங்கள், வீடமைப்பு மற்றும் மின்சாரம், மருத்துவத் தேவைகள், கல்வி மற்றும் பாடசாலை அபிவிருத்தி,  புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள்  விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் விடுதலை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு எனப் பல விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டு இவை தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் முதலில் பரிசீலிக்கப்பட்டன.

அதன் பின்னர் இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளித்த  பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாத்தியப்படக்கூடிய விடயங்கள் தொடர்பாக முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் தொடர்பு கொண்டு விரைவில் அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்தார்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் நம்பிக்கையோடு பயணித்தால் பெறவேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக கிளாலி, முகமாலை,  இத்தாவில், இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் மிதிவெடிகள் அதிகமாகவுள்ளதால் உடனடியாக அப்பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதில் பிரச்சினைகள் உண்டென்றும் ஆனால்,  விரைவில் இந்த மக்களை அங்கு மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

தொடர்ந்து மக்களால் முன்வைக்கப்பட்ட கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பதிலளித்த வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, பளை மத்திய கல்லூரி உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்குமான புனரமைப்பு மற்றும் ஏனைய வசதிகளும் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த உயர்மட்ட மாநாட்டில் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் மக்களின் பங்களிப்பும் அரசாங்கத்தின் உதவிகளும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பொறுப்பான நடவடிக்கைகளும் இணைத்துக் கொள்ளப்படும் என்று வலியுறுத்தப்பட்டது. அத்துடன், அமைச்சரின் ஏற்பாட்டில் வடமாகாணசபை மூலம் மக்களுக்கு 200 சைக்கிள்களும்  வழங்கப்பட்டன.

இந்த மாநாட்டில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக்குழுக்களின் தலைவருமான முருகேசு சந்திரகுமார்,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர்,  உதவி அரசாங்க அதிபர் தலைமைப் பணிமனை, பளை பிரதேச செயலர், பிரதேசசபைச் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடற் பணிப்பாளர்,  உள்ளுராட்சி உதவி ஆணையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ்,  ஆளுநரின் விசேட செயலணியின் செயலாளரும் ஜனாதிபதியின் செயலணி அதிகாரியுமான சு.இராசநாயகம், கூட்டுறவு அதிகாரிகள், பனை தென்னைவள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .