2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை உடன் நிறுத்துக: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டமையைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் பேசும் மாணவர்களின் மீதான அடக்குமுறைகளை அன்றைய காலகட்டங்களில் தரப்படுத்தல்களில் இருந்து ஆரம்பித்து பின்னர் அவை படுகொலை என்ற வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இன்று எமது இனத்திற்கான தனித்துவ கலாசாரங்களை அழித்தும் இனந்தெரியாத தாக்குதல்கள் என்ற போர்வையிலும் தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

எமது பல்கலைக்கழகமானது தமிழ் பேசும் மக்களால் என்றும் உயர்ந்த இடமாக பார்க்கப்படுவதுடன் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாக உலகம் எங்கும் வியாபித்து நிற்கின்ற அதேவேளை, எங்கள் உரிமைக்குரலை நசுக்குவதற்கு கடந்த பல வருடங்களாக இலங்கை அரசு முயன்று வருகின்றன. இது உலகத்திற்கே தெரிந்த உண்மை. அதன் ஒரு அங்கமாகவே இன்று எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் காடையர்களால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களினை வழிநடத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் மற்றும் அதன் மாணவ ஒன்றிய உறுப்பினர்களையே சாரும். இது இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிற்கும் பொதுவான ஒன்றே. ஆனால் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது இன்றுவரை எமது மாணவர்களை மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களையும் வழிநடத்தி சென்றுகொண்டிருக்கின்றது. இந்த உயரிய இடத்தினை  பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எத்தனையோ விலைமதிப்பில்லா உயிர்த்தியாகங்கள் மற்றும் எம் ஒவ்வொருவரினதும் இனப்பற்றின் ஊடாகவே அடைந்தோம். இந்த உயரிய இடத்தில் இருக்கும் எமது மாணவ ஒன்றிய தலைவருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ.; பழம் வீதியில் உள்ள ஸ்ரீலங்கா படையினரின் காவலரணில் இருந்து சுமார் 50 மீற்றர் அருகில் வைத்து இனந்தெரியாத நபர்கள் என்று அழைக்கப்படும் அதேவேளை எமது மக்களால் கௌரவமாக இனந்தெரிந்த நபர்கள் என அழைக்கப்படுவோரால் கோழைத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த கோழைத்தனமான தாக்குதலானது 'நாங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போதும் உங்களை தாக்குவோம் உங்களிற்கு கேட்பதற்கு யாரும் இல்லை'; என்ற ஒர் செய்தியை  தமிழ் பேசும் மக்களாகிய எங்கள் எல்லோருக்கும் சொல்லி செல்கின்றது. இதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம். எங்கள் அமைதியை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் குளிர் காய எண்ணுகின்றனர். இதை நாம் தெடர்ந்தும் அனுமதிப்பதா? இன்று எமது பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவருக்கு நடந்தது நாளை எங்கள் ஒவ்வொரு மாணவர்களிற்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எங்களிடம் இருக்கின்றது? இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம்

எமது பல்கலைக்கழத்திற்கு பெரும்பான்மை இன மாணவர்களின் வரவு இன்று அதிகரித்துள்ள வேளையில் தமிழ் மாணவர்களின் தலைமைத்துவத்தை விரும்பாத சில தீய சக்திகளின் செயற்பாடே இந்த தாக்குதலாகும். இது போன்ற காட்டுமிராண்டி தாக்குதல்களை நடத்துபவர்களை நாம் உடனடியாக இனங்கான வேண்டும். அவர்களை சட்டங்களிற்கு முன் நிறுத்தவேண்டும். இல்லையேல் இனிவரும் காலங்களிலும் எமது தமிழ் பேசும் ஒவ்வொரு மாணவர்களும் இந்த தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம்;. எனவே யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகமாகிய நாம் மாணவ அடக்கு முறைகளிற்கு எதிராக முக்கிய சில  கோரிக்கைளை முன்வைத்து அகிம்சை வழியில் கிளர்ந்தெழ ஆயத்தமாக உள்ளோம்.

1.    ஒவ்வொரு தமிழ் மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
2.    மாணவ ஒன்றியத் தலைவரினை தாக்கியவர்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
3.    மாணவர் ஒன்றிய தலைவருக்கு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில்  ஸ்ரீலங்கா படைகளின் காவலரண் உள்ளது. எமது பாதுகாப்பிற்கு இல்லாத அது போன்ற பாடசாலை மற்றும் எமது பல்கலைக்கழகத்திற்கு மற்றும் மக்கள் செறிந்து வாழும் இடங்களிற்கு காவலரண்களை உடனே அகற்ற வேண்டும்.
4.    மாணவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
5.    மாணவர்களின் தனித்துவமான செயற்பாடுகளில் இனந்தெரியாதோர் என அழைக்கப்படுவோர் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்.
6.    மாணவர்களாகிய நாம் எங்கு செல்லவும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வெற்றுக் கோரிக்கைகளாக நாம் தெரிவிக்கவில்லை. அதனூடாக நாம் எமது அனைத்து தமிழ் பேசும் மாணவர்களின் உரிமைகளாகவே தெரிவித்து கொள்கின்றோம். எங்கள் மாணவ உரிமை கோரிக்கைகளை நிலைநிறுத்தும் வரை நாங்கள் எங்கள் விரிவுரைகளை நிறுத்தியுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்தி அதற்கு தீர்வு வழங்குவதன் மூலம் கற்றலை சிறப்பாக முன்னெடுத்து செல்ல உதவிடுமாறு விரைவாக கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு விரைவான தீர்வினை பெறுவதற்கு எங்களுடன் எல்லா பாடசாலைகள் உயர் கல்விக்கூடங்கள் மற்றும் எங்கள் தமிழ் தேசத்தின் சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம.; நாங்கள் அனைவரும் விரைவாக ஒன்றிணைவதன் மூலம் எங்கள் பலத்தினை நிரூபிப்போம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் எங்கள் உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் எங்கள் முன் கனிந்துள்ளது. அதை நாம் சரி வர பயன்படுத்துவதன் மூலம் எமது இலக்குகளை விரைவுபடுத்துவோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X