2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடகடல் வளங்களை பாதுகாக்குமாறு கோரி யாழ். அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளில் உடனடியாகத் தலையிட்டு வடமாகாண கடல் வளங்களைப் பாதுகாக்குமாறு கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் வட மாகாண கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகள் இன்று மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு,...

01.    இந்திய இழுவைப் படகுகள் எமது கடற்பரப்பினுள் அத்துமீறி தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதனால் எமது தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாதுள்ளது.

02.    தென்னிலங்கை மீனவர்கள் எமது பிரதேச கடல்களில் தொழில் புரிந்து வருவதனால் எமது பிரதேச மீனவர்கள் தொழிலின்றி துன்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

03.    இலங்கை அரசின் கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட தொழில்கள் எமது கடற்பரப்பில் தாராளமாக எவ்வித தடையுமின்றி தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

04.    கடற்றொழில் சார் அமைப்புக்கள் யாழ். மாவட்டத்தில் பலவகையான கட்டமைப்புக்களுடன் இயங்கி மாவட்டத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தியிருந்தது. கடந்த மூன்று மாதங்களாக தொழில்சார் கட்டமைப்பு அமைப்புக்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளன.
 
மேற்படி நான்கு விடயங்களாலும் எமது மீனவ மக்கள் பல விதமான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த நிலையிலிருந்து எம்மவர்கள் மீண்டெழத் தாங்கள் உரிய வழி வகைகளை மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வு மலர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய இழுவைப் படகுகள் 

இந்திய இழுவைப் படகுகள் மீண்டும் எமது கடற்பரப்பினுள் ஊடுருவி தொழில் நடைமுறையில் ஈடுபடுவதனால் தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் எமது தொழிலாளர்களின் வலைகளை வெட்டியும் கொண்டு சென்று விடுகின்றனர். இம்மாதம் 12ஆம்  திகதி பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் 7 மீனவர்கள் தமது வலைகளை இழந்து தொழில் செய்ய முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

தலா ஒவ்வொரு மீனவரும் இரண்டு இலட்சம்; முதல் மூன்றரை இலட்சம் வரையான மூலதனத்தை இழந்துள்ளார்கள். 16ஆம் திகதி இன்பர்சிட்டி கிராமத்தில் இடம்பெயர்ந்து வாழும் பூலோகசிங்கம் என்பவரது படகு, ஒன்றரை இலட்சம் பெறுமதியான வலையை இழந்துள்ளார். இவ்வகையான நடவடிக்கைகளால் எம் மீனவர்கள் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை தொடருமானால் எமது மீனவர்களின் நிலை என்னவாகும்? எமது மக்களின் பரிதாபம் தீர வழி கிடைக்குமா? கிடைக்காதா? கிடைக்காதவிடத்து சட்டத்தை மீனவர்கள் கையில் எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம். கடந்த போர்க் காலங்களினால் எல்லாம் இழந்த நாம் தொடர்ந்து இழப்பீடுகளைச் சந்திக்கும் தன்மை, எமது மக்களின் உள்ளத்தில் எப்படி ஏற்படும்?

தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடைமுறை

தென்னிலங்கை மீனவர்கள் அரசின் அனுமதியுடன் எமது பிரதேச கடற்கரைகளிலும், வீடுகளிலும் வாடிகள் அமைத்து படகுகளை வாடகைக்கு அமர்த்தி எமது கடற் பிரதேச நிலத்தடி வளங்களான சங்கு, அட்டை என்பனவற்றை அள்ளிச் செல்வதனால் எமது கடலில் மீன் வளம் அருகி வருகின்றது.

இதன் காரணமாக எமது எதிர்கால சந்ததி கடற்றொழில் செய்யும் வாய்ப்பை இழந்து விடும் ஆபத்தான சூழல் உருவாகி வருகின்றது. அது மட்டுமல்ல இப்போதைய சூழலில் வாழ்பவர்கள் கூட மீனைப் பிடிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. கடல் வளம் காப்பாற்றப்பட வேண்டும். மீனவர் சமுதாயம் வாழ வேண்டும்.

தடை செய்யப்பட்ட தொழில்கள் அனைத்தும்

நடைமுறையில் செயற்பட்டு வருகின்றன

எமது கடல் வளம் காப்பாற்றப்பட வேண்டும் என்று எமது பிரதேச புத்திஜீவிகளால் திட்டமிடல் செய்யப்பட்டு 2000 ஆண்டளவில் இழுவைப் படகுத் தொழில் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானித்து 2003ஆம் ஆண்டளவில் நிறுத்தப்பட்டது.

அந்த நல்லெண்ண அடிப்படையில் இலங்கையின் கடற்தொழில் அமைச்சு கடல் வளங்களை அழித்தொழிக்கும் தொழில் வகைகளை நிறுத்துவதென்று முடிவும் செய்யப்பட்டு சுற்று நிருபம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் இழுவைப் படகு தொழில், முக்கூட்டு வலை, தங்கூசி வலை, நாய் வலை, விறாண்டி வலை, லைலா வலை போன்றன தடைசெய்யப்பட்டு விட்டன. ஆனால் தற்போது அனைத்து வலைகளும் பாவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் எமது மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தொழில்சார் கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு
கடந்த மூன்று மாதங்களாக சீர்குலைந்துள்ளன

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசங்களுக்கான புதிய தெரிவுகள் அதிரடி நடவடிக்கையாக ஒரேநேரம் ஒரே திகதியில் கூட்டுறவு உதவி ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் நடைபெற்றது.

புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. ஒரு வாரம் கழித்து 5.8.2011 அன்று அதை ஆணையாளரின் அதிகாரத்தைக் கொண்டு அனைத்து சமாசங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தன.
அந்த வகையில் இன்று மூன்று மாதங்களாகியும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

கடற்தொழில் மக்கள் யாருமற்றவர்கள் என்ற எண்ணம் உருவாகிவிட்டதோ? இந்நடவடிக்கைகளின் பின் தொழில்சார் நடவடிக்கைகள் கட்டமைப்புக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுவிட்டது. நிர்வாக ரீதியான  கட்டுக்கோப்பு சிதைக்கப்பட்டுவிட்டது.

சில சமாசங்கள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளது. யுத்த காலத்தில் கூட கட்டமைப்பு உடையாத வகையில் செம்மையாக நடந்த நடவடிக்கைகள் ஜனநாயகம் என்று எல்லோரும் பேசுகின்ற இக்காலகட்டத்தில் இந்நிலையா?. கடல்சார் நடவடிக்கைகள், சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் ஆகியன செயலிழந்து வருகின்றன. இதன் காரணமாக கடல் வாழ் சமூகம் சீரழிந்து செல்கின்றது.

எனவே, எமது மீனவ இனம் சொல்லொணா துன்ப துயரங்களை சந்தித்து தாங்கொணா நிலையில் வாழும் எமது மக்களுக்கு தாங்களாவது மேற்கூறப்பட்ட காரணங்களை நன்கு ஆராய்ந்தறிந்து உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவ சமுதாயம் மீண்டும் வாழ, வளர அதற்குரிய வழிவகைகளைச் செய்து தர வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X