2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரி, மருதடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் இன்று புதன்கிழமை இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

அக்ஷஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இராணுவப் பொறியியலாளர் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மேற்படி வீடுகளை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் கட்டளைச் தளபதி பிரிக்கேடியர் டபிள்யூ.ஏ.வீ.ஏ.சுதசிங்க பொதுமக்களிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் 523ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி தெவண்டகம, சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி அஞ்சலி தேவி சாந்தசீலன், தென்மராட்சி பிரதேச பிரதிக் கல்விப்பணிப்பாளர் கே.வரதரஜமூர்த்தி மற்றும் வீட்டு உரிமையாளர்களான எஸ்.அருளானந்தம், திருமதி கனகராசா பரமேஸ்வரி, இராணுவத்தினர், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இங்கு உரையாற்றிய 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஏ.வீ.ஏ.சுதசிங்க,  யாழ். குடாநாட்டில் இதுவரையில் 1,780 வீடுகள் இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவின் வழிநடத்தலில் பொருளாதாரத்தில் கீழ்நிலையிலுள்ள மக்களைத் தெரிவுசெய்து அந்த மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் நோக்கில் இராணுவத்தினரால் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவத்தினர் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மக்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்து மக்களோடு நல்லுறவைப் பேணுவதற்காக பல திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதிலொன்றுதான் வறிய மக்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு.

இராணுவத்தினரோடு சேர்ந்து மக்கள் ஜக்கியப்படுவதன் மூலம் தான் நாட்டினை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லமுடியும். இங்குள்ள இராணுவத்தினர் தங்களுக்கு வீடுகள் இல்லாவிட்டாலும் பறவாயில்லை. இந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில் முன்நின்று வருகின்றார்கள்.

தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் அந்நியோன்னிய தொடர்புகளைப் பேணுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும்' என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .