2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் எயிட்ஸ்தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உலக எயிட்ஸ் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ்தின நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்த வகையில்,  யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையின் ஏற்பாட்டில் தியாகி அறங்கொடை நிலையத்தில் எயிட்ஸ் நோயினால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, இந்திய வைத்தியர் அசோக், யாழ். வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன்,

'யுத்த சூழலில் கட்டுக்கோப்புடனும் சமூகக் கட்டுப்பாடுடனும் வாழ்ந்த சமூகம் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அவை சீர்குலைந்து எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகும் பாதகமான சூழ்நிலைக்கு ஆளாகி வருகின்றனர். 

மனித குலத்திற்கே சவால் விடுத்துக்கொண்டிருக்கும் இவ் எயிட்ஸ் நோயானது குணப்படுத்தமுடியாத பாரிய கொடிய நோயாகும். ஏனைய நோய்களைப்போன்று இந்த நோய் சாதாரணமானதல்ல. உயிர் கொல்லும் கொடிய நோய்.

மனித நடத்தைக் கோலங்களில் பிறழ்வு ஏற்படும் நிலையைவிடுத்து சுயகட்டுப்பாட்டுடன் வாழ்வதன் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கமுடியும்.

ஒருவர் எச்.ஜ.வி. தொற்றுக்குள்ளாகினால் அது 10 வருடங்களின் பின்னரே  எயிட்ஸ் நோயெனத் தெரியவரும். இந்த நோயின் பரம்பல் 10 வருடங்களின் பின்னர் தான் தெரியவரும்.

இன்றைக்கு எமது சமூகத்தில் இந்த நோயின் தாக்கம் இல்லையெனக் கூறிவிட முடியாது. தனிமனித நடத்தைக் கோலங்களில் நாம் எப்போது தவறுகின்றோமோ அப்போது இந்த நோய் எமது உடலுக்குள் செல்வதற்கு வாய்ப்புண்டு.

உலகத்தில் 1981ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை உலக சுகாதார நிலையத்தின் தரவுகளின்படி 33.5 மில்லியன் மக்கள் எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர். 25 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக மதிப்பீட்டின்படி ஒரு நாளைக்கு 7,000 ஆயிரம் பேர் எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகின்றனர். 1 நிமிடத்திற்கு 5 பேருக்கு எச்.ஜ.வி தொற்றுகிறது

இலங்கையைப் பொறுத்தளவில் 1,388 பேர் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளகியுள்ளனர். 3,000 பேர் எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை 216 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த் தாக்கம் காரணமாக இலங்கையில் 20 வயது முதல் 50 வயதினர் பாதிக்கப்படுகின்றனர்.  வடமாகாணம் இந்த நோயின் தாக்கத்தில்; ஜந்தாவது இடத்திலுள்ளது.

வடமாகாணத்தில் 503 பேர் எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 43 பேர் எச்.ஜ.வி தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய நவீனத்துவ தொலைத்தொடர்பு வசதிகளும் சுதந்திரமான போக்குவரத்துக்களும் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகளினாலும் பாலியல் நோய்களின் பரம்பல் அதிகரிப்பதற்கான சூழல் காணப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .